தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் வடக்கு கிழக்கு மக்களிடம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று  நடந்து கொண்ட விதம் அனைத்தும் ஒரு நாடகம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் வடக்கு கிழக்கு மக்களிடம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று  நடந்து கொண்ட விதம் அனைத்தும் ஒரு நாடகம் என்பதை மீண்டும் நிரூபிக்கின்ற விடயமாகவே “அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் அடைக்கப்படவில்லை” என்ற நீதியமைச்சர் ஹர்சன நாணக்காரவின் கருத்து அமைந்துள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்றைய நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும்,
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற கருத்து மேலோங்கி இருக்கும் இந்த சூழலிலே நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார அவர்கள் அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் அடைக்கப்படவில்லை என்ற ஒரு கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அவரது கட்சியின் தலைவர் அனுர குமார திஸநாயக்க தேர்தல் காலத்தில் வடக்கு கிழக்கிற்கு சென்ற பொழுது பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு கீழே கைது செய்யப்பட்ட மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருப்பவர்களும், தண்டனை பெற்றவர்களும் விடுவிக்கப்படவேண்டும் என்றே தெரிவித்திருந்தார். பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றுமுழுதாக சட்டத்தின் ஆட்சியை மீறுகின்ற ஒரு சட்டம் என்ற கருத்தையும் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் அனுர அரசாங்கமே அரசியல் கைதிகள் என்ற சொற்பதங்களை பாவித்த ஒரு சூழலில் இன்று நீதியமைச்சர் அந்த நிலைப்பாட்ல் இருந்து பின்வாங்குவதாக இருந்தால் அது ஒரு அரசியல் காரணமாக மட்டுமே இருக்கலாம்.
ஏனென்றால்
அரசியல் கைதிகளை விடுவிப்பதாக முன்னர் அனுர தரப்பினர் கூறியிருந்தமை என்பதும் ஒரு அரசியல் தீர்மானமேயாகும்.
அப்படியான சூழலில், ஹர்சன நாணயக்கார என்ற ஒரு நபர் தன்னுடைய அறிவையும் தனக்கு இருக்கக் கூடிய அரசியல் பின்னணியையும் மீறி, நீதியமைச்சர் என்ற பதவிக்கு வந்தமைக்கு பின்னர், கடந்த காலங்களில் இருந்த நீதியமைச்சர்களுக்கு இருந்த அதே மோசமான பிற்போக்குவாத நிலைப்பாட்டுக்கு இணைந்து போகின்ற வகையில் நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவும் கருத்துத் தெரிவித்திருப்பது பலத்த ஏமாற்றத்தைத் தருவதுடன் இவ்விடயம் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கு மக்களிடம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று நடந்து கொண்ட விதம் அனைத்தும் ஒரு நாடகம் என்பதை மீண்டும் நிரூபிக்கின்ற விடயமாகவே இந்த அரசியல் கைதிகளின் விவகாரம் அமைந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.

10:53 am

எமது இலக்குகள்