13 தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியுமல்ல, தீர்வுமல்ல. தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டியே இனப்பிரச்சினையை தீர்க்க ஒரேவழியாகும் - : த.தே.ம.முன்னணி கடிதம்

கடந்த வாரம் 13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கட்சிகளின் யோசனைகளை சமர்ப்பிக்குமாறு சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கட்சித் தலைவர்களிடம் கோரப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு எழுத்து மூலம் 08-08-2023 அன்று கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களும் ஒப்பமிட்ட கடிதம் இன்று 09-08-2023 அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

13ஆம் திருத்தம் இனப்பிரச்சினைத் தீர்வின் தொடக்கப்புள்ளியாகவோ இறுதித் தீர்வாகவோ ஏற்றுக் கொள்ள முடியாது என்பதனைத் தெளிவுபடுத்தி
1987 ஆம் ஆண்டிலேயே தமிழ்த் தரப்புக்களால் 13ஆம் திருத்தம் நிராகரிக்கப்பட்டது என்பதனைச் சுட்டிக்காட்டி
வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் தமிழ்த் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்டி அரசியல் யாப்பின் மூலம் மட்டுமே 75 வருடங்களாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும் எனபதனைத் தெளிவுபடுத்தி கடிதம் எழுதப்பட்டுள்ளது. 13ஆம் திருத்தம் 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது அதனைத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தொடக்கப்புள்ளியாகக் கூட ஏற்றுக் கொள்ள முடியாதெனக் குறிப்பிட்டு அதனைச் சட்டமாக நிறைவேற்ற அனுமதிக்க வேண்டாமென்றும் அதனைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி அப்போதய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரம்இ செயலாளர் அமிர்தலிங்கம் சிரேஸ்ட உபதலைவர் இரா சம்பந்தன் ஆகியோர் ஒப்பமிட்டு அப்போதய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கு அனுப்பிய கடிதமும் இணைக்கப்பட்டதுடன்இ கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து தயாரித்த தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்டித்தீர்வு யோசனை வரையும் இணைத்து இன்றையதினம் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் இன்று 09-08-2023 கையளிக்கப்பட்டது என கட்சியின் பொதுச் செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-08-09_Proposal for a new constitution to resolve the ethenic conflict submited to Ranil Govt_