ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.சி.சி ற்குப் பாரப்படுத்தப்படல் வேண்டும் – இணை அனுசரணை வழங்கும் நாடுகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் வலியுறுத்தல்

இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கும் நாடுகளால் இலங்கை தொடர்பான தீர்மானம் தொடர்பில் நாடுகளது கருத்துக்களை அறிந்து தீர்மானத்தில் திருத்தங்களை மேற்ககொள்ளும் கலந்துரையாடல் கடந்த 22/09/2022 அன்று பிரித்தானியாவின் தலைமையில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்காவின் பெயர் குறித்த தீர்மானம் தொடர்பிலான முதலாவது கலந்துரையாடல் செப்ரெம்பர் இஇரண்டாம் வாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கட்டடத் தொகுதியில் இணை அனுசரணை வழங்கும் நாடுகளால் பிரித்தானியாவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இரண்டாவது கலந்துரையாடல் பிரித்தானியாவின் தலைமையில் இணை அனுசரணை வழங்கும் நாடுகளால் 22-09-2022 வியாழக்கிழமை மு.ப 11.00 மணியளவில் மனித உரிமைகள் பேரவையின் கட்டடத்தில் அறை இலக்கம் 25 இல் ஆரம்பமாகி நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் சீனா இந்தியா ரஸ்யா உட்பட ஐரோப்பிய ஆபிரிக்க ஆசிய மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். அதேவேளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊடாக அனுமதி பெற்று பாதிக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.

மேற்படி கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பில் திருமதி லீலாவதி அம்மாவும் கலந்து கொண்டிருந்தார்கள்.

மேற்படி கூட்டத்தில் நாடுகளுக்கிடையிலான கலந்துரையாடல் நிறைவடைந்த பின்னர் தன்னார்வ அமைப்புக்கள் ஊடாக கலந்து கொண்ட பிரதிநிதிகளது கருத்துக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

இதன்போது,

தமிழ் உலகம் அமைப்பின் ஊடாக குறித்த மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்வதற்கான அனுமதியைப் பெற்றுச்சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கருத்து தெரிவிக்கும் போது,

இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலைக் குற்றங்கள் தொடர்பில் யுத்தம் முடிந்து 13 வருடங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த பத்து வருடங்களாக மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால் மேற்படி பொறுப்புக்கூறலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இனியும் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை. இவ்விடயங்களை சுட்டிக்காட்டி எமது கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நானும் கையொப்பமிட்டு கடந்த 6 செப்டம்பர் 2022ல் கடிதம் ஒன்றினை இணை அனுசரணை வழங்கும் நாடுகளாகிய உங்களுக்கு அனுப்பி இருந்தோம்.

எனவே இத்தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களது நன்மைக்காக நிறைவேற்றுவதாக இருந்தால் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலைக்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தும் தீர்மானத்தினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என ஆணித்தரமாக வலியுறுத்தி இருந்தார்.

அதேவேளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக கலந்து கொண்டிருந்த லீலாவதி அம்மையார் கடந்த பத்து வருடங்களாக உள்ளக விசாரணை தீர்மானம் மூலம் தாம் ஏமாற்றப்பட்டுள்ளமை தொடர்பாகவும் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் மற்றும் நஷ்டஈட்டு அலுவலகம் என்பன வெறும் ஏமாற்று நடவடிக்கைகள் எனவும் ஆணித்தரமாக சுட்டிக்காட்டினர். உள்ளக

உள்ளக விசாரணை மூலம் தமக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது எனவும் சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இணை அனுசரணை வழங்கும் நாடுகளிடம் ஆணித்தரமாக வலியுறுத்தி இருந்தார்.