- முகப்பு
- செய்திகள்
மாமனிதர் சிவமகாராசா அவர்களின் 16வது நினைவுதினம் இன்று!
சிறிலங்கா அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகவியலாளருமான மாமனிதர் சிவமகாராசா அவர்களின் 16ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
2002ம் ஆண்டு சிவமகாராசா அவர்களினால் ”நமது ஈழநாடு” என்ற பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதுடன், அவர் அப்பத்திரிகையின் பணிப்பாளராகவும் செயலாற்றி வந்தார்.
அப்பத்திரிகையானது தமிழ்த் தேசியக் கருத்தியல்களை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததனாலும், சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் தமிழர்கள் மீதான இனப்படுகொலையை வெளிப்படுத்திவந்ததாலும் 15.12.2005அன்று யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள அப் பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்த சிறிலங்கா இராணுவத்தினரால் பத்திரிகை அலுவலகமானது சோதனையிடப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக அப்பத்திரிகையின் ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்தன.
அந்நிலையிலேயே 20.08.2006 அன்று அப் பத்திரிகையின் பணிப்பாளர் சிவமகாராஜா அவர்கள் சிறிலங்கா இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த தெல்லிப்பழையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து இரவு 7.20மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவர் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் நமது ஈழநாடு பத்திரிகை வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டு, பத்திரிகை அலுவலகமும் மூடப்பட்டது. அதன் பின்னர் அங்கு ’சுரபி பதிப்பகம்’ என்ற பெயரில் அச்சுவேலைகள் இடம்பெற்று வந்தன.
அந்த அச்சகமானது சட்டவிரோத பிரசுரங்களை அச்சடித்தாக குற்றம்சுமத்தப்பட்டு 21.09.2010அன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மூடி சீல் வைக்கப்பட்டதுடன், சிவமகாராஜா அவர்களின் நெருங்கிய உறவினரான அவ் அச்சகத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சிறிலங்கா அரசின் துணைஇராணுவக்குழுவாக இயங்கிய ஈபிடிபியின் பத்திரிகையான தினமுரசு பத்திரிகையை அவ் அச்சகத்தில் அச்சிட்டுத் தருமாறு டக்ளஸ் கோரியிருந்ததாகவும், அதற்கு அச்சக உரிமையாளர் மறுத்திருந்ததாகவும், அந்நிலையிலேயே அச்சக உரிமையாளர் கைது செய்யப்பட்டதாகவும், நமது ஈழநாடு பத்திரிகையின் ஊழியர்களை தினமுரசு பத்திரிகைக்காக வேலை செய்யுமாறு டக்ளஸ் கட்டாயப்படுத்தியிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியருந்தன.
இச்சம்பவங்களின் பின்னர் அப்பத்திரிகை அலுவலகமானது சில காலம் சிறிலங்கா புலனாய்வுத்துறையின் முகாமாக பயன்படுத்தப்பட்டிருந்தது.
2007ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களான ரஜிவர்மன் மற்றும் நிலக்சன் ஆகியோர் நமது ஈழநாடு பத்திரிகையில் ஊடகவியலாளர்களாக பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இன்று மாமனிதர் சிவமகாராசா அவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 16வது வருட நினைவுதினமான இன்று அவருக்கு அஞ்சலிகளைத் தெரிவிப்பதுடன், அவரின் கொலைக்கான நீதியையும் கோரிநிற்கின்றோம்.
– ஆவண வெளியீட்டுப் பிரிவு,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி