சிறிலங்கா அரசின் கொடூர இனஅழிப்பின் சாட்சியாக நிற்கும் வீரமுனை!

வீரமுனைப் படுகொலை – 12.08.1990

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் இனஅழிப்பால் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான வீரமுனைக் கிராமத்தின் கதை!

வீரமுனைக் கிராமமானது தமிழ்த்தேசத்தின் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவிற்கு மேற்காக அமைந்துள்ளது. இதற்கு அண்மையாக உள்ள சம்மாந்துறைப் பிரதேசமானது போர்த்துக்கேயர் காலத்தில் தென்பகுதி கடற்கரைகளிகலிருந்து விரப்பட்ட முஸ்லீம்கள் இடம்பெயர்ந்து குடியேறிவாழும் பிரதேசமாகும்.

வரலாற்றிற்கு முந்திய நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட தமிழர்கள் செறிந்து வாழ்ந்த வீரமுனைக் கிராமமானது 1954இலிலிருந்து சிறிலங்கா அரசபயங்கரவாதம் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய முஸ்லீம் ஊர்காவல்ப்படையின் தொடர் இனப்படுகொலை நடவடிக்கைகளால் அழிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது.

1954இல் இப்பகுதியில் தனிநபர்களுக்கிடையிலான பிரச்சனையொன்றினால் இக்கிராமமானது சம்மாந்துறை முஸ்லீம்களால் இரத்தக்களறியாக்கப்பட்டு, தீயிட்டு அழிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து காடுகளுக்குச் சென்று அங்கு வீரச்சோலை மற்றும் கணபதிபுரம் போன்ற புதிய கிராமங்களை உருவாக்கினார்கள்.

1954ம் ஆண்டுக்குப் பின்னர் இப்பகுதி மக்கள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்தையே சுமந்து வாழ்ந்தனர். கொண்டைவெட்டுவான் இராணுவமுகாமும், இக்கிராமத்தைச் சூழ இருந்த முஸ்லீம் கிராமங்களும் வீரமுனையிலிருந்து தமிழர்களை அகற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டனர். 1990ம் ஆண்டு ஆனி, ஆடி மற்றும் ஆவணி மாதங்கள் இனிமேல் அங்கே தமிழர்கள் வாழவோ, காலடிவைக்கவோ முடியாதென்ற நிலையை உருவாக்கியது.

1990 ஆனி மாதம் 20ம் திகதி கொண்டைவெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து வந்த இராணுவத்தினராலும், முஸ்லீம் காடையர்களாலும் சுற்றிவளைக்கப்பட்டு, அங்கிருந்த மக்கள் அனைவரையும் வீரமுனைக் கோவிலடிக்குச் செல்லுமாறு கட்டளையிடப்பட்டது.

ஓரு சில நாட்களின் முன்னர் கல்முனையில் தமிழர்கள் கொல்லப்பட்டதையறிந்த மக்கள் அச்சத்துடன் ஆலயத்தில் ஒன்றுகூடினர். ஆலயத்திற்குச் செல்லாமல் வீடுகளில் இருந்தவர்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்று, வீடுகளுடன் சேர்த்து எரித்தினர். வீதிகளில் நடமாடியவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அன்று மதியம் 2.00 மணியளவில் வீரமுனைப் பிள்ளையார் ஆலயத்திற்கு கனரக வாகனங்களில் வந்த இராணுவத்தினர், கோவிலில் தஞ்சமடைந்திருந்த மக்களில் 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரையும் கோவிலின் பின்வீதியில் ஒன்று சேருமாறு பணித்தார்கள். முதற்கட்டமாக இவர்களில் 69 இளைஞர்களை கைது சென்று அழைத்துச் சென்றார்கள்.

இராணுவத்தால் கைது செய்யப்பட்ட அனைவரும் சம்மாந்துறையிலுள்ள மார்ஜன் பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு வைத்து கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்களில் 55 பேர் வரையானோர் சம்மாந்துறையிலுள்ள மலைக்காட்டுக்குள் வைத்து உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். மிகுதிப்பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனாலும் இராணுவத்தினரின் கொலைப்பசி அடங்கவில்லை. மீண்டும் 29.06.1990அன்று மக்கள் தங்கியிருந்த கோவிலுக்கு வந்த சிறிலங்கா இராணுவத்தினர் அங்கிருந்த ஆண்களில் 56 பேரை கைது செய்து அழைத்துச் சென்றார்கள். கொண்டைவெட்டுவானில் பெருநெருப்பெரிந்தது. அவர்கள் அனைவரும் சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் எறியப்பட்டார்கள்.

இதனையடுத்து வீரமுனைப் பிள்ளையார் ஆலயத்தில் தங்கியிருந்தவர்களில் பெம்பான்மையானவர்கள் இராணுவ அச்சுறுத்தல்களிலிருந்து தப்புவதற்காக இடம்பெயர்ந்து காரைதீவு மகாவித்தியாலத்தில் தஞ்சமடைந்தனர். காரைதீவுப் பாடசாலை அகதிமுகாமியது. சொந்த மண்ணிலேயே எமது மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். அகதி வாழ்வோடு விட்டிருந்தால்க்கூடப் பரவாயில்லை. அகதிமுகாமைக் கொலை முகாமாக மாற்றினார்கள் சிறிலங்கா இராணுவத்தினர்.

03.07.1990அன்று காரைதீவு மகாவித்தியாலயத்தைச் சுற்றிவளைத்தனர் இராணுவத்தினர். தமிழ் மாணவர்களின் கல்விக்கூடம் கொலைக்கூடமாக்கப்பட்டது. ஆட்டுப்பண்ணைகளில் இறைச்சிக்குத் தெரிவாகிய ஆடுகளைப் போல அகதி முகாமிலிருந்து 11 இளைஞர்களை கைது செய்து இராணு முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அவர்களில் எவருமே திரும்பிவரவில்லை.

கொலைவெறி அடங்காத இராணுவத்தினர் 05.07.1990 அன்று மீண்டும் பாடசாலையைச் சுற்றிவளைத்து அங்கிருந்து 13 இளைஞர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்ட அனைவருமே சித்திரவதைகளின் பின்னர் உயிருடன் ரயர் போட்டு எரிக்கப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்களைத் தேடிச்சென்ற உறவினர்களும் இராணுவத்தால் மோசமாக தாக்கப்பட்டு கலைக்கப்பட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து பாடசாலையில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீண்டும் வீரமுனைக்கு அருகிலுள்ள அகதிமுகாமிற்குத் திரும்பினார்கள். 10.07.1990 அன்று வீரமுனை அகதிமுகாமைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் அங்கிருந்த 15 இளைஞர்களைக் கைது செய்து அழைத்துச் சென்று கடுமையான சித்திரவதைகளின் பின்னர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

16.07.1990 அன்று வீரமுனை அகதி முகாமிலிருந்து தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற பெண்களில் 08 இளம்பெண்கள் மல்வத்தை இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்டு, அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டார்கள். பின்னர் அவர்களும் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

26.07.1990அன்று மீண்டும் வீரமுனை அகதிமுகாமைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் அங்கிருந்த 32 பேரைக் கைது செய்தார்கள். இவர்களில் 23 பேர் பாடசாலை மாணவர்களாவார்கள். இவர்களில் எவருமே திரும்பிவரவில்லை.

29.07.1990 அன்று 08 ஆசிரியர்கள் குடும்பத்துடன் பேருந்து ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் எவருமே திரும்பிவரவில்லை.

08.08.1990 அன்று சிறிலங்கா இராணுவத்தினருடன் வந்த சிங்கள ஊர்காவற்படையினரும், முஸ்லீம் ஊர்காவற்படையினரும் அக்கிராமத்தில் வாழ்ந்த 08 பேரை கண்டதுண்டமாக வெட்டிக் கிணற்றில் போட்டார்கள்.

11.08.1990அன்று வீரமுனையிலிருந்து நாவிதன்வெளிக்கு சென்ற 18 பொதுமக்கள் சவளக்கடை இராணுவ முகாமில் இராணுவம், காவல்த்துறை மற்றும் ஊர்காவற்படையினரால் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் ஒரு குழந்தையும், 04 பெண்களும் அடங்குவார்கள். இவர்கள் அனைவரும் துண்டுதுண்டுகளாக வெட்டப்பட்டு சவளக்கடை கோவிலுக்குள் போடப்பட்டு எரிக்கப்பட்டார்கள்.

12.08.1990அன்று மீளவும் வீரமுனை அகதி முகாமிற்கு கூரிய ஆயுதங்கள் துப்பாக்கிகளுடன் வந்த கொண்டைவெட்டுவான் இராணுவ முகாம் இராணுவத்தினர் மற்றும் முஸ்லீம் ஊர்காவல்ப்படையினரால் 25 பேர் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டது. வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. எரியும் நெருப்பில் பலர் உயிருடன் தூக்கி எறியப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

இப் படுகொலைச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் முதலில் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் அவர்கள் அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். வைத்தியசாலைக்கு வந்த இராணுவத்தினரால் அங்கு அனுமதிக்கப்பட்ட 07 பேரில் 03 பேர் கடத்திச் செல்லப்பட்டார்கள். மிகுதி 04 பேர் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

இச்சம்பவங்களின் போது வீரமுனையில் 600 வீடுகளும், வீரமுனைக்கு அருகிலுள்ள கிராமங்களான மல்வத்தை, மல்லிகைத்தீவு, நியூரவுண், கணபதிபுரம், வளத்தாப்பிட்டி மற்றும் சம்மாந்துறையில் தமிழர்களின் 1352 வீடுகளும் சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் முஸ்லீம்களினால் எரிக்கப்பட்டது.

சிறிலங்கா அரச பயங்கரவாத்தின் கோரப்பசிக்கு இலக்காகி மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் வீரமுனைக் கிராமம் முக்கியமான ஒன்றாகும்!

இன்று இப்படுகொலையின் 32வது வருட நினைவுதினமாகும்

– ஆவண வெளியீட்டுப் பிரிவு,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி