யாழ்.பொதுநூலக எரிப்பின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணப் பொதுநூலக எரிப்பின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை(01.6.2022) மாலை-5 மணிக்கு  பொதுநூலகத்தின் முன்பாக இடம்பெற்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி.கிருபா கிரிதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதலாவதாக நினைவுச் சுடரேற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து எழுத்தாளரும், தமிழ்த்தேசியப் பற்றாளருமான மு.ஈழத்தமிழ்மணி, வேலணைப் பிரதேச சபை உறுப்பினர் வி.இராசநாயகம், கட்சியின் மூத்த உறுப்பினர் பொன்.மாஸ்டர்
ஆகியோர் நினைவுச் சுடர்கள் ஏற்றினர். தொடர்ந்து சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் கொல்லப்பட்ட போராளிகளுக்கும், தமிழ்மக்களுக்கும் இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எழுத்தாளரும், தமிழ்த்தேசியப் பற்றாளருமான மு.ஈழத்தமிழ்மணி ஆகியோர் நினைவுரைகள் நிகழ்த்தினர்.

இதேவேளை, குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.