யாழ் பல்கலை மாணவனின் உருக்கமான வேண்டுதல்!

இலங்கைத் தமிழர்களின் நிர்க்கதியான நிலைமை இன்று அதள பாதாளத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது. நிகரிடமுடியாத விடுதலைப்போராட்டம் அழிக்கப்பட்டு தமிழினம் அநாதரவாகியிருக்கிறது. கிழக்கின் முஸ்லிம், சிங்களக் கிராமங்களுக்குள் சிக்கியிருக்கின்ற தமிழ்க் கிராம மக்களின் மன வேதனை வார்த்தைகளுக்குள் சொல்லிவிடமுடியாத அளவிற்கு அவலங்களை சந்தித்து வருகிறது. இவ்வாறாக அனைத்து வழிகளிலும் துயரப்பட்டிருக்கும் தமிழிழனத்திற்கு மற்றொரு தேர்தல் வாசலைத்தட்டியிருக்கிறது.
மிகத் தெளிவான புரிதல் ஒன்றை தமிழ்ச் சமூகம் ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒரு இக்கட்டுக்குள் வந்திருக்கிறோம். போர் முடிவுக்குப் பின்னர் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதைந்துவருவதை யாரும் மறுதலிக்க முடியாது.
??யார்யார் வெளியேற்றப்பட்டார்கள்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், சுரேஷ்பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், எம்.கே.சிவாஜலிங்கம், சிறீகாந்தா, சி.வி.விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன், அருந்தவபாலன் என இந்தப் பட்டியல் நீண்டு செல்கிறது. இவர்கள் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி வெவ்வேறு பாதைகளில் பயணித்தாலும் அவர்கள் கை நீட்டுகின்ற நபர்களாக திரு சம்பந்தனும் திரு சுமந்திரனும் மட்டுமே இருக்கிறார்கள்.
??கொள்ளை மட்டுமல்ல கணக்கு கேட்டாலும் வெளியேதான்!
சரி சம்பந்தன், சுமந்திரன் மீது இவர்கள் கை நீட்டுகின்றார்கள் என்று சொல்லிவிட்டு இப்போ கூட்டமைப்பில் பலம் மிக்கவர்கள் இருக்கிறார்கள் தானே என்ற கேள்வியைக் கூட முன்வைக்க முயலலாம். இப்போது தமிழரசுக்கட்சிக்கு 20 கோடி பணம் கிடைத்ததாகவும் அது உரியவர்களுக்கு போய்ச் சேர்ந்ததா? என்று கட்சிக்குள்ளேயே கேட்டுக் கேட்டு இறுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்த தமிழரசுக்கட்சியின் தீவிர பெண் செயற்பாட்டாளர் மனம் திறந்திருந்தார். அவர் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களின் பக்கங்களில் இருந்து மறைந்து போக முன்னரேயே அவர் அனைத்துப் பதவிகளில் இருந்தும் தூக்கி எறியப்பட்டார்.
அதேபோல மாவை சேனாதிராசா, சரவணபவன் போன்றவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் பரஸ்பரம் தற்போது பகிரங்கமாக இடம்பெறவதாகவும் தெரியவந்திருக்கிறது. எனவே தேர்தலின் பின்னர் கூட்டமைப்பில் இப்போது இருக்கின்ற இன்னும் சிலர் வெளியே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் முக்கியஸ்தராக விளங்கிய ஒரு பெண் மணி, புலத்தில் இருந்து வந்த அந்த நிதி தொடர்பில் கேள்வி எழுப்பியபோது, ஒரு விசாரணைக்குழுவையேனும் நியமிக்க வக்கில்லாத தமிழரசுக்கட்சி உடனடியாகவே அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்ததுடன் அதன் பேச்சாளர் ஆயிரம் கோடி ரூபா கோரி நோட்டீசும் அனுப்பிவைத்தார்.
அவருக்கு ஒரு நீதி அந்தப் பெண்ணுக்கு ஒரு நீதியா? மக்கள் பணம் எங்கே என்று கேட்ட அந்தப் பெண்ணிடம் ஆதாரத்தைத் தாருங்கள் என்று சொல்லக்கூட மனம் ஏவவில்லையா? அல்லது முடிவெடுப்பவர்களுக்கும் பங்குண்டா என்ற கேள்வியை மக்கள் முன்வைக்கிறார்கள்.
மேலே குறிப்பிடப்பட்ட கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய அனைவரும் குற்றவாளிகளா? அல்லது அவர்கள் அனைவரும் கை நீட்டும் அந்த ஒன்று அல்லது இரண்டு நபர்கள் குற்றவாளிகளா? இதனை வாசகர்கள் கேட்டுக்கொள்ளலாம்.
அதனையும் விடுவோம், அண்மையில் வடமராட்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் எதிர்காலத்தில் அமைச்சுப்பதவியைப் பெறுவதாக இருந்தால், அதற்காக பேரம் பேசும் சக்தியாக இருப்பதாக இருந்தால் பலம் மிக்கவர்களாக நாடாளுமன்றம் செல்ல மக்கள் ஆணை வேண்டும் என்று சுமந்திரன் பகிரங்கமாகவே தெரிவித்தார். இத்தனைக்கும் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராவார். ஆனால் இந்த நிலையில் அமைச்சு என்ற கதைக்கே இடமில்லை என்று தெரிவித்த சம்பந்தனோ தமிழரசுக்கட்சியோ குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லை. மாறாக அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று வழமையான கழுவிற மீனில் நழுவிற மீனாக பதிலளிததுவிட்டார்.
இதனை சுமந்திரனின் கருத்து என கடந்துபோய்விடமுடியாது அதே தனிப்பட்ட நபர்தான் ஐ.நா மனிதஉரிமை பேரவை தீர்மானங்கள் தொடர்பாக அனைத்து வெளிநாடுகளுக்கும் தன்னந்தனியாக சென்று தமிழர் தரப்பு கோரிக்கையினை முன்வைத்து வைந்துள்ளார் அப்படியானால் எவ்வாறு அவற்றில் நம்பிக்கை கொள்ள முடியும்? ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைவிதியையே அவர் தனியொருவராகத்தானே எடுத்துக்கொள்ளுகின்றார்.  சரி அமைச்சுப் பதவி தான் வேண்டும் என்றால் கடவுளை வணங்க இடையில் தரகர் எதுக்கு என்பதால் அங்கயன் இராமநாதனுக்கோ விஜயகலாவுக்கோ வாக்களித்துவிடலாமே? என்ற கேள்வியை முன்வைத்தால் திருவாளர்கள் என்ன பதில் சொல்வார்கள்?
சரி இனி சுமந்திரன் மீதும் சம்பந்தன் மீதும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எழுவதற்கான தேவை என்ன என்று பலர் கேட்கலாம். 
மிகத் தெளிவாக ஒரு விடயத்தினை புரிந்துகொள்ளவேண்டும். தீர்வு என்பது உலக ஒழுங்கில் சர்வதேசம் தனது தேவைக்காக இங்கு சில மாறுதல்களை ஏற்படுத்த முற்பட்டால் சாத்தியப்படலாமே தவிர, இங்கு சொல்லப்படுகின்றபோல எந்த முயற்சி (அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும்) ஊடாகவும் இனி அது சாத்தியமாவதற்கு இடமில்லை. காரணம் போரிலே வெற்றி பெற்ற பெரும்பான்மை இனம் இங்கு ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை என்கிற செய்தியை வலுவாக சர்வதேசத்திற்கு சொல்வதற்கு தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கிறது. அதே சர்வதேசம் இலங்கையை பகைத்துக் கொள்வதற்கு தயாரில்லை. காரணம் சீனாவின் தலையீடு இலங்கையில் அதிகரிக்காமல் இருப்பதற்கு என்ன செய்யலாமோ அனைத்தையும் செய்வதற்கு கூட்டமைப்பும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் நேசிக்கின்ற இந்தியாவும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நேசிக்கின்ற அமெரிக்காவும் தயாராக இருக்கின்றன. இங்கு இந்தியாவும் அமெரிக்காவும் தென்னாசிய பிராந்தியத்தில் ஆதிக்கத்தைச் செலுத்துவதற்காக முடிந்த அளவிற்கு என்ன செய்வதென்றாலும் தயார் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
அதற்கு உதாரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றிபெற வேண்டும் என அனைத்து வகையிலும் முயன்ற இந்தியா கோத்தபாய ராஜபக்ச வென்றவுடன் செங்கம்பளத்தில் வரவேற்பு அளித்ததை வடிவேலு பாணியில் சொல்வதானால் ஐயோ.. ஐயோ என்பதாகத் தானே பார்க்க முடிந்தது. சர்வதேசம் எங்களுடனேயே நிற்கிறது நாங்கள் பலமாக இருக்கிறோம் என்று சம்பந்தன் தேர்தல் மேடைகளில் சொன்னால் சரியா? இன்னமும் சர்வதேசம் எமக்கான தீர்வைப் பெற்றுத்தரும் என்று எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும்.
பாதுகாப்புச் செயலரும் இராணுவத் தளபதியும் மதிக்கின்ற விடுதலைப்புலிகள் அமைப்பு ஏன் சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் அருவருப்பாகத் தெரிகிறது!
???இனி முக்கியமான கட்டத்திற்கு வருவோம்,
 
இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் எனப்படுபவர் அந்த நாட்டின் படைத்துறையை தீர்மானிக்கும் அதிகாரம் பெற்ற ஒருவராகவே கொள்ளப்படவேண்டியவர். இப்போது பாதுகாப்புச் செயலாளராக இருப்பவர் கமால் குணரட்ண. அதேபோல போரில் அரசாங்கம் வெற்றிபெற்றபோது படைத்துறைக்கு தலைமை தாங்கியவர் சரத் பொன்சேகா, அவர்கள் இருவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமையையும் அமைப்பையும் மிக உயர்வான வகையிலேயே இன்றுவரை தெரிவித்துவருகிறார்கள்.
எதிர்காலத்திற்கான போர் குறித்த வரலாற்றை எழுத்தாவணங்களே கொண்டு சேர்க்கப்போகின்றன. அவ்வாறான எழுத்தாவணங்களில் சிங்களத் தரப்பினர் பேணப்போகின்ற ஒரு நூலாக கமால் குணரட்ண எழுதிய நூல் இடம்பெறத்தான் போகிறது. கால ஓட்டத்தில் அவர்கள் மாற்றத்தைக் கூட செய்துவிட்டுப் போகலாம். ஆனால் எதிரிகளான அவர்களே போற்றிச் சொல்கின்ற போராட்டத்தை கொச்சைப்படுத்த,  இழிவுபடுத்த,  அருவருப்பானதாக கருதவேண்டிய தேவை திரு சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் எப்படி வந்தது?
தமிழரசுக்கட்சி வீரியம் குறைந்தபோதே தமிழர்விடுதலைக் கூட்டணி என்ற இன்னொரு கட்டத்துக்குப் போனது. அங்கிருந்தும் எதனையும் சாதித்துக்கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே இளைஞர்களுக்கு உசுப்பேத்தி அவர்களை ஆயுதவழிக்குத் தள்ளியவர்கள் அன்றைய அரசியல் தலைவர்கள் என்பதை நிராகரிக்கமுடியுமா? கறுப்புக்கொடி காட்டி,  உண்ணாவிரதம் இருந்து எதனையும் சாதிக்கமுடியாது என்பதை உணர்ந்ததால் தானே உங்கள் கட்சியின் பிதாமகர் என்று சொல்லிக்கொள்கின்ற தந்தை செல்வா ‘தமிழினத்தை கடவுள் தான் காப்பாற்றவேண்டும்’ என்றார்.  அதன் பின்னரேயே இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். ஆயுத வழி வன்முறையை தவறானது என்று கொள்வோம். ஈபிடிபியும் புளொட்டும் ஆயுதம் தானே கடைசிவரை வைத்திருந்தார்கள். நாற்பதாயிரத்தைக் கடந்த இளைஞர்கள் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் பின்னால் ஏன் சென்று வீழ்ந்து உயிர் விட்டார்கள். உங்கள் மொழியில் சொன்னால் வேலையில்லாதவர்கள் தான் போராட்டத்திற்கு சென்றார்கள் என்று கொள்வதா?
கூட்டமைப்பிலிருந்த முன்னாள் முக்கியஸ்தர்கள் 15 பேர் வெளியேறியும் நீங்கள் மட்டுமே உத்தமர்கள் என்று சொல்கிற நீங்கள். விடுதலைப்போராட்டத்திற்கு போய் பல்லாயிரம் இளைஞர்கள் உயிரைவிட்டமையும் தவறானது என்று தானே சொல்கிறீர்கள்.
சரி.. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாகத்தின் பின்னால் அல்லது அது மக்கள் மயப்படுத்தப்படுவதற்கு பின்னால் விடுதலைப்புலிகள் இல்லை என்று தெரிவிக்கின்ற உங்களுக்கு மானம்,  ரோசம் அல்லது உணர்ச்சி நரம்பில் ஓடுகின்ற இரத்தத்தில் உண்மை இருந்தால் உங்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒன்றை விட்டு வெளியேற முடியுமா? சிங்கள மக்களுக்கு ஏற்றபோல சிங்கள ஆட்சியாளர்களின் மனம் நோகாமல் கதைக்கவேண்டும் என்று எண்ணுகின்ற நீங்கள் எதிர்ப்பரசியல் கோட்பாட்டைப் பின்பற்றுகின்ற கட்சியாக தமிழ் மக்கள் எண்ணி வாக்களிக்கின்ற கட்சியோடு இணைந்து நின்று ஏன் பிச்சைப்பாத்திரம் ஏந்துகின்றீர்கள்.
சிங்கள தேசியம் என்கிற உங்களதும் உங்கள் தலைவரதும் ஆழ் மன விசுவாசத்தை வெளிப்படுத்த தமிழ்த் தேசியம் என்கிற உயரிய கிரீடத்தை ஏன் தலைமேல் வைத்து கேவலமான பிழைப்பு நடத்துகிறீர்கள்?
சர்வதேசம் தீர்வு வழங்கும் என்று மக்களுக்கு கதை சொல்கின்ற நீங்கள் உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்,  இலட்சக்கணக்கான உயிர்விலைகள் கொடுக்கப்பட்டு தமிழினத்திற்கு பிரச்சினை உண்டு,  அதற்கு தீர்வு வேண்டும் என்று சர்வதேச காதுகளுக்கு அறைந்து சொன்னது முள்ளிவாய்க்காலில் கொட்டிக்கொடுக்கப்பட்ட உயிர்கள் தான் என்பதை மறுக்க முடியுமா? தொடர்ந்தும் அறுபதுகளில் கறுப்புக்கொடி காட்டிக்கொண்டே இருந்தால் மக்களின் பிரச்சினை கொழும்புக்கூடக் கேட்டிருக்குமா?
ஆயுதப் போராட்டத்தை விரும்புகின்றவர்கள் எனக்கு வாக்களிக்காதீர்கள் என்று பகிரங்கமாக தெரிவிக்கின்ற சுமந்திரனோ,  கடந்த காலத்தைப் பற்றிக் கதைப்பதாக இருந்தால் நிறையக் கதைக்கவேண்டும் அதில் நிறையப் பிரச்சினைகளைப் பற்றிக்கதைக்கவேண்டி வரும் என்று ஏளனமாக பேசிய சிறீதரனோ,  ஜெனீவா வரை ஒலித்த நீதியின் குரல் உங்களாலேயே நசுக்கப்பட்டது என்பதை நிராகரிக்க முடியுமா?
சம்பந்தகுக்கும் சந்திரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தம் கனவான்கள் ஒப்பந்தம் எனத் தெரிவித்து எந்த நிபந்தனையும் இன்றி நல்லாட்சிக்கு ஆதரவு வழங்குங்கள் என்று தமிழ் மக்களிடம் பிச்சை எடுத்து மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்து எதனைச் சாதித்தீர்கள்? அதனையும் தாண்டி ஒரு படி மேலே போய் போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டிலேயே தீர்த்துக்கொள்வோம். நல்லாட்சிக்கு 2 வருடம் அவகாசம் வழங்குங்கள் என்று சர்வதேசத்திடம் இருந்த பிடியை பிடுங்கி மைத்திரியின் கையில் கொடுத்தீர்களே? கடையில் மைத்திரி எங்கே? நல்லாட்சி எங்கே? கனவான்கள் ஒப்பந்தம் செய்த சந்திரிகா எங்கே?  ஆக 30 ஆண்டுகளாக உயிர்விலை கொடுத்து வளர்த்தெடுத்த விடுதலைப்போராட்டம் சர்வதேசத்தின் கைகளில் கொண்டு நிறுத்திய தமிழிழத்திற்கான விடியலுக்கான வாய்ப்பினை ஒரு சில தனிமனிதர்களாக நீர்த்துப் போகச் செய்தீர்களே? இனி என்ன தீர்வு உங்களால் பெற்றுத்தர முடியும்? அதற்கு என்ன மூலோபாயம் வைத்திருக்கிறீர்கள்?
ஜனநாயக வழியிலான போராட்டம் சாத்தியமில்லை என்பதாலேயே ஆயுதப் போராட்டங்கள் தொடங்கின. ஆயுதப் போராட்டம் என்றால் அது வன்முறைப் போராட்டம் தான். அதன் வழிமுறைகள் மலர்களால் ஆன பஞ்சணைகள் கிடையாது. போராடப்போனவர்கள் கண்களை,  கைகளை,  கால்களை இழந்தார்கள்,  தங்கள் உயிர்களை இழந்தார்கள்,  ஒரே குடும்பம் நான்கு,  ஐந்து உயிர்களை இழந்தது,  குடும்பங்களே நிர்க்கதியாகினார்கள். எல்லாமும் இன விடுதலைக்காகத்தான்.
ஒட்டுமொத்தத்தில் அந்தப் போராட்டத்தினை ஏற்கமுடியாது,  அதில் உடன்பாடு இல்லை என்று சொல்லும் அருகதை உங்களுக்கு இல்லை. தேர்தல் மேடைகளில் உங்கள் சக உறுப்பினர்கள் போராளிகள்,  மாவீரர்களைச் சொல்லிப் பிச்சை எடுப்பதையும்,  முன்னாள் போராளிகள் என்று சொல்லிக்கொண்டு அரசியல் செய்பவர்களை வைத்துப் படம் காட்டுவதையும் நெஞ்சுரம் இருந்தால் நிறுத்திக்காட்டுங்கள்.
இலங்கையில் தீர்வு என்பது வெறும்பகல் கனவுதான். அதற்கான எந்த வழிமுறையும் இல்லை. இருந்த வழிமுறைகளையும் மூடிவிட்டீர்கள். எனவே  நீங்கள் சேவகம் செய்ய விரும்புகின்றவர்களின் எடுபிடிகளாக இருப்பதற்கும் உங்களை அவர்களின் விசுவாசிகளாகக் காட்டுவதற்கும் பல்லாயிரம் உயிர்விலைகளையும் பல கோடி மக்களின் மன உணர்வுகளையும் மலினப்படுத்தாதீர்கள்.
வீரம் நிறைந்த விடுதலைப் போராட்டத்தின் வீர வரலாறு மே 18 உடன் முடிந்துவிட்டது. அதற்கு முன்னர் நிகழ்த்தப் பெற்ற தியாகங்களை நாட்டிலும் தமிழ்நாட்டிலும் புலத்திலும் சுயலாபத்திற்காக பயன்படுத்தும் கேவலங்களை வரலாறு மன்னிக்காது.
அன்பான எம் தமிழ் உறவுகளே!
 
கடந்த பத்தாண்டுகளாக நாம் நம்பியிருந்த தமிழ்த்த தலைமைகள் தமிழர் விடிவிற்காக எதையுமே செய்யவில்லை இதுவரைகாலமும் நம்மை ஏமாற்றியவர்களை இம்முறை புறம்தள்ளி தேர்தலுக்காக கூட்டணியாக அல்லாது கொள்ளை வழியில் உறுதியோடு பயணிக்கும், தமிழின அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணையை கோரியும் தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளை சோரம்போகாமல் தீர்த்துவைக்க பாடுபடும் தரப்பினை உங்கள் தெரிவாக கொள்ளவேண்டும் என இந்த சந்தர்ப்பத்தின் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
 
சட்டத்துறை மாணவன்
யாழ் பல்கலைக்கழகம்