தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – பாராளுமன்றப்  பொதுத்தேர்தல் – 2015

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – பாராளுமன்றப்  பொதுத்தேர்தல் – 2015
தேர்தல் விஞ்ஞாபனம்
பின்னணியும் அறிமுகமும் தமிழர் தேசத்தின் இறைமை
காலனித்துவவாதிகளிடம் எமது இறைமையை இழக்கும் வரை, தமிழர் தேசம் இறைமையும் ஆட்சி உரிமையும் கொண்ட தனியான தாயகத்தை இலங்கைத்தீவில் வரலாற்றுரீதியாகக் கொண்டிருந்தது. முழு இலங்கைத்தீவும் 1833 இல் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் ஒரே அரசியல் நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டது. இதன்போது, தமிழர் தேசத்தின் அங்கீகாரமின்றி ஆங்கிலேய ஆட்சியாளர்களால் தமிழர் தாயகம் சிங்கள தேசத்;துடன் ஒன்றிணைக்கப்பட்டது.
1948 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதியிலிருந்து தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தமிழ்த்தேசத்தின் இறைமையும், ஆட்சியுரிமையும் தமிழ்தேச மக்களின் விருப்பமின்றி சிங்கள தேசத்திடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வு மூலம் இத்தீவில் இனப் பிரச்சினைக்கு வித்திடப்பட்டது.
உரிமை மறுப்பும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களும்
1957 ம் ஆண்டில் இருந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக, காலத்திற்குக் காலம் தமிழ்த் தலைவர்களும் சிங்கள ஆட்சியாளர்களும் அரசியல் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்கள். ஆயினும், காலப்போக்கில் அவையாவும் சிங்கள ஆட்சியாளர்களால் கிழித்தெறியப்பட்டன அல்லது மீறப்பட்டன. அதேவேளை, சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்களின் உரிமைகள் திட்டமிட்ட ரீதியில் மறுக்கப்பட்டன. அநீதிகள் தொடந்தும் இழைக்கப்பட்டன.
சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பும் தமிழர் தேசத்தின் எழுச்சியும்
தமிழினத்தின் இருப்பை அழிக்கும் நோக்கோடு, நில அபகரிப்பின் மூலம் தமிழர் தாயகத்தின் ஆட்புல ஒருமைப்பாடு சிதைக்கப்பட்டது. தமிழர்களின் மொழி, பண்பாடு போன்ற முக்கிய அடையாளங்களின் அழிப்பு ஆரம்பித்தது. தமிழர் தேசத்துக்கு எதிரான சிங்கள தேசத்தின் இனப் பாரபட்சம் இனஅழிப்பாக மாற்றம் பெற்றது. இனஅழிப்புக்கு எதிராக எழுந்த தமிழர்களின் அகிம்சைப் போராட்டங்களை ஆயுத முனையில் அடக்கியது சிங்கள தேசம்.
அப்பாவி தமிழ் மக்கள் மீது 1956, 1958, 1977, 1983ம் ஆண்டுகளில் திட்டமிடப்பட்ட அரச வன்முறைகள் ஏவிவிடப்பட்டன. 1972ல் தமிழ் இனத்தின் பிரதிநிதிகளின் எதிர்ப்பிற்கு மத்தியில் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களினால் நிறைவேற்றப்பட்ட ஒற்றையாட்சி முறையிலான குடியரசு அரசியல் சாசனம், தமிழ் இனத்தின் உரிமைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மறுத்த நிலையில், 1976 ம் ஆண்டு;, தமிழ் தேசிய இனத்திற்கு உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், முழுமையான இறைமையை கொண்ட சுதந்திர தமிழ் அரசை நிறுவுவதற்காக வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1977 ம் ஆண்டு யஸ்ரீலை மாதம் நடைபெற்ற இலங்கை பாராளுமன்றத் தேர்லில், தமிழீழ கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தமிழினத்தின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அமோகமான ஆதரவை அளித்ததன் மூலம் சுதந்திர தமிழீழத்திற்கான மக்களாணை வழங்கப்பட்டது.
இருப்பினும், தமிழர் தேசத்தின் சனநாயக ரீதியிலான அரசியல் முன்னெடுப்புகளை சிங்கள தேசம் திட்டமிட்டு தடுத்ததுடன்;, தமிழர் தேசத்துக்கு எதிரான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. அரச அடக்குமுறையை நியாயப்படுத்தக் கூடிய வகையில் அரசியலமைப்பிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டம் என்ற பெயரில் மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. சமதருணத்தில், கட்டமைப்புசார் இனஅழிப்பும், பண்பாட்டு இனஅழிப்பும் சிங்கள தேசத்தால் தீவிரப்படுத்தப்பட்டது.
தமிழர் தேசத்தின் இருப்பையும்; தனித்துவத்தையும் பாதுகாக்கவும், சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும் ஆயுதப் போராட்டமே ஒரே வழி என்ற தவிர்க்க முடியாத நிலைக்கு தமிழர் தேசம் தள்ளப்பட்டு ஆயுதப் போராட்டம் விரிவடைந்தது. பிராந்திய மயப்பட்ட தமிழர்களின் போராட்டம் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசத்தின் இறைமை ஆகிய கோட்பாடுகளை அடித்தளமாகக் கொண்ட திம்புப் பிரகடனம் பிறப்பெடுப்பதற்கு வழியமைத்தது.
சிங்கள தேசம் இதயசுத்தியற்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதால், பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்தது. ஒரு புறம் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் மீறப்பட்டது. மறுபுறம், தமிழர்களின் நலனை முதன்மைப்படுத்தாத ஒப்பந்தங்கள் தமிழர் தேசத்தின் மீது திணிக்ப்பட்டது.
இத்தகைய சூழலில், தமிழர்களின் உரிமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. அளப்பரிய உயிர்த்தியாகங்கள் ஊடாக விடுதலைப் புலிகளால் இலங்கைத்தீவில் ஏற்படுத்தப்பட்ட இராணுவச் சமநிலை ஊடாக 2002 ம் ஆண்டு சமாதானப் பேச்சு வார்த்தைக்கான சூழல் உருவாக்கப்பட்டது.
அவ்வேளையில் விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசிய இனத்தின் தாயக நிலப்பரப்பின் 70 வீதத்தை தொடர்ச்சியாகத்; தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அங்கு ஓர் அரச நிர்வாகத்திற்குச் சமமான சகல அம்சங்களையும் உள்ளடக்கிய நிர்வாகக் கட்டமைப்பை நடாத்தி ஓர் நடைமுறை அரசினைத் தம்வசம் கொண்டிருந்தனர் தமிழீழ விடுதலைப் புலிகள். இவ்வாறான சூழ்நிலையில் 2002 ம் ஆண்டில் உருவான சமாதான சூழல் ஊடாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய, கௌரவமானதும், நீதியானதுமான அரசியல் தீர்வை அடைந்து கொள்ளுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அர்ப்பணிப்புடனும், இதயசுத்தியுடனும் முயற்சித்தனர்;. இந்த அடிப்படையிலேயே விடுதலைப் புலிகளால் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை(ஐளுபுயு) வரைபு முன்வைக்கப்பட்டது.
ஆனாலும் சமாதான வழிமுறையூடாக தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு எதனையும் முன்வைக்க விரும்பாத பௌத்த சிங்கள பேரினவாத அரசுகள் காலத்தை இழுத்தடித்து தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகப் பலவீனப்படுத்தி, தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை அழிப்பதிலேயே முனைப்புக்காட்டின. 2005 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுத் தலைமையானது சமாதானக் கதவுகளை முற்றாக மூடியதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான போரினை தீவிரப்படுத்தியது. மூன்று வருடங்கள் இடைவிடாது ஓய்வின்றி மேற்கொண்ட இனஅழிப்புப் போரின் மூலம் விடுதலைப் புலிகளது இராணுவ பலத்தை அழித்தது.
கடந்த 40 ஆண்டுகளில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் 50,000 திற்கும் அதிகமான இளைஞர்கள் தமது உயிர்களை எமது தேசத்திற்காக தியாகம் செய்துள்ளனர். இலட்சக்கணக்கான எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பூகோள அரசியலும் தமிழர் போராட்டமும்
இந்துசமுத்திரத்தில் நடைபெறும் பூகோள அரசியல் போட்டியில் இலங்கைத்தீவானது ஒரு முக்கிய புள்ளியாகும். இந்த பூகோள அரசியல் போட்டியானது எமது இனத்தின் விடிவிற்கான பயணத்தில் பல தாக்கங்களை பல்வேறு காலகட்டத்திலும் ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் இப் பூகோள அரசியல் போட்டியானது, தமிழ் மக்கள் தமது இலக்கை அடைவதற்கான வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. இந்த வாய்ப்புகளை தமிழ் மக்களின் நலன்சார்ந்து, அர்ப்பணிப்புடனும் ஆக்கபூர்வமாகவும் அணுகுவதன் மூலமும், எமது இலக்கை அடையலாம் என்கிற தர்க்கரீதியான உறுதியான நம்பிக்கையுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது பயணத்தை தொடர்கிறது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை
இந்தகைய சூழலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஆகிய நாம், இரு தேசங்களின் கூட்டான – ஒரு நாடு என்கின்ற கோட்பாட்டினை முன்வைத்து நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்று இலங்கைத் தீவினை மையமாக வைத்து ஒரு பூகோள அரசியல் போட்டி இடம்பெறுகின்றது. அந்தப் பூகோள அரசியலில் தமிழ் மக்களுக்கும் காத்திரமான இடமுண்டு. அப்;போட்டியூடாக தமிழர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவமானது தமிழர்களுக்கான நிகரற்ற பேரம்பேசும் சக்தியாகும். அதனை அடிப்படையாக வைத்து, தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முன்னிலைப்படுத்தி சர்வதேச அரசியலை கையாளுமிடத்து தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தினை பெற்றுக் கொளலாம் என்பது எமது திண்ணமான நிலைப்பாடு.
தமிழ் மக்களின் நலன்கள், அவர்களது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, என்பவற்றின் அடிப்படையில் தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்படுவதன் மூலமே உறுதிப்படுத்தப்பட முடியும்.
இதனை சிறீலங்கா என்கின்ற வலுவான இனவாத சிந்தனை வயப்பட்ட தற்போதுள்ள அரச கட்டமைப்பு முறைக்குள் அடைய முடியாது. இங்கு அரசு மீளுருவாக்கம் (ளுவயவந சுநகழசஅயவழைn) இடம்பெற்று, தேசங்களின் கூட்டாக, ஆகக் குறைந்தது தமிழ் சிங்கள தேசங்களின் இறைமைகளைக் கூட்டுச் சேர்த்த (Pழழடiபெ ழக ளுழஎநசநபைவெநைள) இருதேசங்கள் கொண்ட ஒரு நாடாக இலங்கை அரசு உருவாக்கப்படுவதன் மூலமே தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்கக்கூடிய தீர்வை அடைய முடியும்.
தமிழ்த்; தேசம் (யேவழைn) எனும் அந்தஸ்த்து அங்கீகரிக்கப்படல் வேண்டுமென்பதிலும், அவ்வந்தஸ்;;து சமரசத்திற்கு அப்பாற்பட்டது என்பதிலும் நாம் உறுதியாக உள்ளோம்.
சர்வதேச சமூகமானது தமது பிராந்திய நலன்களை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை அரசு மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தமிழர்களது உரிமைப் போராட்டத்தை பயன்படுத்தும் என்று, நாம் எமது 2010 தேர்தல் அறிக்கையில் எதிர்வுகூறியது நடந்தேறியது. இந்நிலையானது, பூகோள அரசியலின் விளைவால் வடிவ மாற்றத்தோடு தொடருவதற்கான வாய்ப்புகளுண்டு. இதன் காரணமாகவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் தமது அடிப்டை கொள்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம், என்பவற்றை விட்டுக் கொடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. அவ்வாறு உறுதியாக இருந்தாலே சர்வதேச சமூகம் தமது நலன்களை அடைவதற்காக தமிழர்களது பிரச்சினையை கையில் எடுக்கும் பொழுது, தமிழ் மக்களும் தமது நலன்களை அடைவதற்கு அதனைப் பயன்படுத்த முடியும்.
தீர்வுத் திட்டம்
மேற் கூறிய தர்க்கத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் – தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை அடிப்படையில், தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்பது அங்கீகரிக்கப்பட்டு “ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்களின் கூட்டு” என்பதை இனப்பிச்சினைக்கான தீர்வுத்திட்டமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்மொழிகிறது.
இந்த இறைமையுள்ள தேசங்களின் கூட்டிணைவு என்பது கனடாபோன்று உலகின் முன்னேறியுள்ள பல நாடுகளில் உள்ளதுபோன்ற அதிகார அமைப்பாகும்.
இங்கு இரு தேசங்கள் ஒரு நாடு என நாம் கூறுவது முஸ்லிம், மலையாக மக்களின் உரிமைகளை மறுப்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. மலையக தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் தாம் சுயநிர்ணய உரிமையை கோர உரித்தடையவர்கள் என கோரிக்கைகளை முன்வைப்பின் நாம் அதனை ஏற்றுக் கொள்வோம். ஆனால், சுயநிர்ணய உரிமை அரசியலை முன்னெடுப்பதா இல்லையா என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள் என்பது எமது நம்பிக்கை. பேரினவாத அடக்குமுறைக்கு எதிராக அவர்களுடன் கைகோர்த்து ஒன்றாக பயணிப்பதற்கு நாம் என்றும் தயாராகவே உள்ளோம்.
தேச அங்கீகாரம் என்ற அடிப்படையிலான தீர்வை வலியுறுத்துவது – நிலையான தீர்வுக்கு அடிப்படையானது
இலங்கைத் தீவானது பௌத்த சிங்கள மக்களுக்காக மாத்திரமே சிருஸ்டிக்கப்பட்டது எனும் மகாவம்ச மனநிலை காரணமாகவே இத்தீவில் தமிழ்த் தேசத்தின் இருப்பை சிதைப்பதற்காக இன்று வரை தொடரும் இனவழிப்பு செயற்திட்டத்தை சிங்கள தேசம் முன்னெடுத்து வருகின்றது. ஆகவே எமது (ஆயுதம் தரித்த, ஜனநாயக வழி தடவிய) போராட்டம், எமது தேசம் என்ற பரிமாணத்தை பாதுகாத்தல் பற்றியதாகும். அந்த பரிமாணம் நாமே எம்மை ஆளும் சுயநிர்ணய உரிமையை நாம் பெறும் போதே பாதுகாக்கப்படும்.
தேசம் என்ற முன்வைப்பு ஒரு வெற்றுக் கோசம் அல்ல. அப்பாவனைக்கு நடைமுறை அரசியல் அர்த்தம் உண்டு. இறைமையின் உறைவிடம் சிங்கள பௌத்த அரசாகிய சிறீலங்கா அரசிடமே என சிங்கள தேசம் கூறுகிறது.
எம்மை பொறுத்த வரையில் அத்தகைய அணுகுமுறையை ஏற்றுக் கொண்டு செய்யப்படும் எந்தவொரு அதிகாரப் பகிர்வு ஏற்பாடும் இத்தீவின் மீதான சிங்கள பௌத்தத்தின் ஏகபோக உரிமையை ஏற்றுக் கொள்வதற்கு நிகரானது. அப்படி நாம் ஏற்றுக் கொண்டால் சிங்கள தேசம் அந்த அதிகாரப் பகிர்வை எதிர்காலத்தில் ஒரு தலைபட்சமாக நீக்குவதற்கான வாய்ப்பு உண்டு.
தமிழர்களை தேசம் என நாம் முன்னிறுத்தும் போது, அவர்களை ஓர் சுயநிர்ணய உரிமையின் படி வந்த இறைமையின் உடைமையாளர்களாக நாம் முன்நிறுத்துகின்றோம். அந்த அடிப்படையில் ஒரு தீர்வு எட்டப்படும் போது, சிங்கள அரசு அதை ஒரு தலைப்பட்சமாக இல்லாமல் செய்ய முடியாது. ஆதலால்தான், தமிழர்கள் ஒரு தேசம் என்ற அடிப்படையில் நாம் அரசியல் தீர்வை அணுக வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
உதாரணமாக, அதிகாரப் பகிர்வு வழியிலாக நாம் சமஸ்டி தீர்வை பெற்றுக் கொண்டாலும், அதுவோர் அதிகாரப் பகிர்வு செயன்முறையாக இருப்பதால், சிங்கள தேசத்தால் எதிர்காலத்தில் புதியவோர் ஒற்றையாட்சி அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் அவ்வேற்பாட்டை தன்னிச்சையாக இல்லாதொழிக்க முடியும். மாறாக இறைமையுள்ள தேசங்கள் என்ற வகையில் சிங்கள, தமிழ் தேசங்கள் இணைந்து உருவாக்கும் இறைமையான தேசங்களின் சமஸ்டி என்பது தனித்து ஒரு தேசத்தால் தன்னிச்சையாக இல்லாமல் செய்யப்பட முடியாதது. அத்தகைய தீர்வே நீடித்து நிலைக்கக் கூடியதாகும்.
13ஆம் திருத்தச் சட்டமோ, அதன் கீழான மாகாண சபைகளோ தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகவேனும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது எமது உறுதியான நிலைப்பாடாகும்.
அரசியல் தீர்வை அடைந்து கொள்வதற்கான வழிமுறைகள் கொள்கை அடிப்படைகளில் இருந்து வழுவாது தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் உள்ள தமிழ்ப் புத்திஐPவிகள், சட்டவல்லுனர்கள், கல்விமான்கள், பொது அமைப்புக்கள் உள்ளிட்ட சகல தரப்பினருடைய ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புடனேயே தமிழினத்தின் அரசியல் எதிர்காலத்தினை நிர்ணயிக்கப் போகும் அரசியல் தீர்வுத்திட்டம் உள்ளிட்ட அரசியல் முன்னகர்வுகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்கொள்ளும்.
எமது இறுதித்தீர்வை அடைவதற்கு கீழ்வரும் மூன்று வழிமுறைகள் முக்கியமானவை என நாம் கருதுகிறோம்.
1. தாயகத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்களையும், தமிழகத்தில் வாழும் தமிழ் உறவுகளையும் அரசியல் மயப்ப்படுத்தி அணிதிரட்டி போராடுவது. 
 
2. சிங்கள முஸ்லீம் முற்போக்கு சக்திகளை எமது தார்மீக உரிமைப் போராட்டத்தில் இணைத்து செயற்படுவது.
 
3. இலங்கைத் தீவின் பூகோள அரசியலையும் அதில் தமிழர்களின் வகிபாகத்தையும் சரி வர பாவித்து சர்வதேச அபிப்பிராயத்தை தமிழர் நலன்களை நோக்கி நகர்த்தல்.
மேற்படி பின்புலத்திலேயே சிறீலங்கா அரசாங்கத்தோடு நாம் சர்வதேச மத்தியஸ்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இவை இரண்டும் குறிபிட்டவோர் கால எல்லைக்குள் உரிய பயன்களை தராவிட்டால், பொது சன வாக்கெடுப்பு ஒன்றைக் கோரி தமிழ் மக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அணி திரட்டும்.
பொது சன வாக்கெடுப்பு ஒன்றைக் கோரல் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையை செயற்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக நாம் பார்கின்றோம். இதற்கான கால அட்டவணையை நாம் தன்னிச்சையாக நிர்ணயிக்க விரும்பவில்லை. இச்செயன்முறை பற்றி மக்களோடு கலந்தாய்வு செய்து, அவர்களின் பங்குபற்றலுடன் முடிவு எடுக்கப்படும். வெகுசன அரசியலாக தமிழ் மக்களின் அரசியல் பரிமாணிக்க செய்ய வேண்டும் என்பதே எமது எண்ணம்.
 
தமிழ் மக்களின் உடனடி பிரச்சனைகள் தொடர்பில் எமது அணுகுமுறை
1. நில அபகரிப்புக்கு எதிராகவும் அரசியற் கைதிகள் மற்றும் காணாமற் போனோரின் விடுதலைக்காகம் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டியும் சிங்கள மயமாக்கப்படலிற்கெதிராகவும், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் பிரச்சினை, முன்னாள் போராளிகள் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் இன்னல்கள், சித்திரவதைகள் என்பவற்றிற்கெதிராகவும் தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்ட 75 வீதமான கவனயீர்ப்புப் போராட்டங்களை மக்களையும் மற்றைய கட்சிகளையும் ஒருங்கிணைத்து நாமே முன்னின்று நடாத்தினோம். இத்தகைய போராட்டங்கள் பொலிஸாரால் தடைவிதிக்கப்பட்டபோது நீதிமன்றங்களில் போராடி தடைகளை நீக்கினோம்.
2. கடந்த காலங்களில் முன்னாள் போராளிகளின் குடும்பங்கள், மாவீரர் குடும்பங்கள், போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பலவற்றிற்கு முறையான செயற்திட்டத்தின் கீழ் நாம் தொடர்ச்சியாக உதவி வழங்கி வருகிறோம். இது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் நாம் சளைக்காமல் துணிச்சலாக இந்த வேலைகளை முன்னெடுத்துள்ளோம். மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக நாம் தெரிவு செய்யப்படுமிடத்து, நாம் இவ்வேலைத் திட்டத்தை விரிவுபடுத்துவோம். இதற்கென முறையான அரசு சாரா அமைப்புக்களை சமூகத் தலைவர்களின் உதவியுடன் நிறுவுவோம்.
3. உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் தமது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட மக்களை மீளக் குடியமர்த்த தேவையான அரசியல் முன்னெடுப்ப்புகளை மேற்கொள்வோம். தமிழர் தாயகப் பிரதேசங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள், பொதுக் கட்டங்கள், குடிமனைகள், ஆகியவற்றில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா ஆயுதப்படைகளை வெளியேற்றவும் பொது மக்களது பாவனைக்கு அனுமதிக்கவும் தேவையான அரசியல் முன்னெடுப்ப்புகளை நாம் மேற்கொள்வோம்.
4. தமிழ் மக்களின் இயல்புவாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற சிறீலங்கா அரச படைகள் தமிழர் தாயகப் பிரதேசத்தில் இருந்து விலக்கிக் கொள்ள (றiவானசயறயட) வேண்டும் என்ற அழுத்தங்களை அரசியல் ரீதியாக மேற்கொள்ளுவோம்.
5. நீண்டகாலமாக தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு காரணமாக இருந்த ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ போன்றவற்றை நீக்குவதற்கு தேவையான அரசியல் நடவடிக்கைகளை சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் முன்னெடுப்போம்.
6. காணாமல் போகச் செய்யப்பட்டேர் பிரச்சினை தொடர்பில் அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி கிடைப்பதற்காக நாம் மேற்கொள்ளும் போராட்டங்களை வலுப்படுத்துவதோடு, ஐ.நா மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் உதவியையும் பெற்றுக்கொள்வோம்.
7. தமிழ் மக்கள் மீதான சித்திரவதைகள், கைதுகள், பயமுறுத்தல்கள், ஆட்கடத்தல் என்பனவற்றை தடுத்து நிறுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
8. போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி, அவர்கள் ஆளுமையுள்ளவர்களாக திகழ்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.
9. பேரினால் மனவடுக்களை சுமந்துள்ள எம் உறவுகள் சமூகத்தில் மீண்டும் தன்னம்பிக்கையுடன் மிளிர்வதற்காக உளநல வளத் துணை உட்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.
10. கல்வி மேம்பாட்டுப்பிரிவை உருவாக்கி அதனூடாக இதுவரை பதினைற்திற்கும் மேற்பட்ட “அறிவொளி” எனும் இலவச கல்வி நிலையங்களை நிறுவி கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதுடன் பல்வேறு கல்வி வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். இதனை எதிர்காலத்தில் மென்மேலும் முன்னேற்றுவோம்.
11. இன அழிப்பின் ஒரு அங்கமாக, எமது கலாச்சாரம், பண்பாடு என்பனவற்றை சிதைக்க எமது இளைஞர்களை மையப்ப்படுத்தி எமது தாயக நிலப்பரப்பெங்கும் திட்டமிட்டு புகுத்தப்பட்டுள்ள போதைப்பாவனை எமது கண்ணுக்கு தெரியாத மிகப்பெரிய சவாலாகும். இது எதிர்கால சந்ததியையே, சுயமிழக்கச்செய்து, ஒடிந்து போன சமுதாயமாக எம்மை மாற்றும் தன்மையுள்ளது. இதனை தடுத்து இளைஞர்களின் ஆற்றலையும் சக்தியையும் முன்னோக்கி கொண்டு செல்ல புலமைசார் நிபுணத்துவ உதவியுடன் செயற்திட்டங்கள் மேற்கொள்வோம்.
12. எமது பௌதிக சூழலலை அழிப்பதும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு அங்கமே. சட்டவிரோத மண்ணகழ்வு, காடழிப்;பு, கனிய மண்ணகழ்வு என்பவற்றோடு, யாழ்ப்பாணத்தின் வலிகாமத்தில் நிலத்தடி நீருடன் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை அண்மையில் எழுந்துள்ள பாரதூரமான பிரச்சினையாகும். இது தொடர்பில், சர்வதேசநிபுணர்களின் உதவியுடனான விஞ்ஞானா ரீதியான ஆய்வுகளும் இதிலிருந்து மீள்வதற்கான செயற்திட்டங்களும் எந்த வித அரசியல் கலப்புமின்றி மேற்கொள்ளப்படும். சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீர் கழிவு ஒயிலினால் மாசுபடுத்தப்பட்டபோது மல்லாகம் நீதவான் நீதிமன்று மற்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று ஆகியவற்றில்; எமது சட்டத்தரணிகள் மற்றய சட்டத்தரணிகளுடன் இணைந்து நொதேன்பவர் நிறுவனத்திற்கு எதிராகவும் இலங்கை மின்சார சபைக்கு எதிராகவும் வழக்குகளைத் தொடுத்து தடை ஏற்படுத்தியதுடன் தூயநீருக்கான கவனயீர்ப்புப் போராட்டங்களிலும் பங்குபற்றினோம்.
13. இரணைமடு குடி நீர் விநியோக திட்டம், யாழ்ப்பாண நிலத்தடி நீர் பிரச்சனை என்பவற்றை தீர்க்க அப்பிரதேச மக்களிற்கு எவ்விதத்திலும் பங்கமில்லாதவாறான திட்டங்களை துறைசார் நிபுணர்களின் உதவியுடன் முன்னெடுப்போம்.
14. எமது தாயகமானது நீண்ட கடற்பரப்பை கொண்டது. எமது தேசிய பொருளாதாரத்தின் அச்சாணிகளுள் கடற்றொழில் முக்கியமானது. போரினாலும், சட்டவிரோத சிங்கள குடியேற்றாங்களாலும், கடல்வலயத் தடைச்சட்டத்தாலும் பாதிக்கப்பட்ட எமது கடற்றொழிலாளர்கள் தற்;போது தென்னிலங்கை மற்றும் இந்திய, சீன கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத மீன்பிடி முறைமைகள் மூலம் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். இந்திய இழுவைப்படகுகள் இதில் ஒரு முக்கிய பிரச்சினை ஆகும்.
இப்படியான நடைமுறை முரண்பாடுகளை, சிறு நீரிணையால் பிரிந்துள்ள தாய்த்தமிழக உறவுகளுடன் தீர்வுகாண விடாமல் பேணுவதும் தொடர்ந்தும் பகைப்புலத்தில் வைத்திருப்பதும் தமிழ்த் தேசத்துக்கெதிரான சக்திகளின் திட்டமிட்ட செயற்பாடே. இதை சுமுகமான முறையில் தீர்ப்பதற்கு எமது மக்களின் சார்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அர்ப்பணிப்புடன் செயற்படும். கடற்றொழிலில் ஈடுபடும் எமது மக்களினதும், தமிழக மக்களினதும் பிரதிநிதிகளுடன் சமூக தலைவர்கள், துறைசார் வல்லுநர்கள் உதவியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி எமது கடற்றொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் உழைப்போம்.
15. கிழக்கு மாகாணத்தில் நிகழும் காணி சம்பந்தமான பிணக்குகளிற்கு (உ+ம்: தரவை மேய்ச்சல் நிலப் பிரச்சினை, வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்ட காணிகள்) தீர்வுகாண எமது மக்களுடன் இணைந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம். அம்பாறை மாவட்டம் கல்முனையில் தனியான தமிழ் பிரதேச செயலகம் அமைத்தல் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எமது மக்களுடன் இணைந்து மேற்கொள்ளுவோம்.
16. சம்பூரில் அமைக்கப்பட்டுவரும் அனல் மின் நிலையத்தினால் சுற்றுச் சூழல் பாதிப்பு உள்ளது என மக்களும், சமூக அமைப்புக்களும் மேற்கொண்டுவரும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நாம் வெளிப்படையான ஆதரவை வழங்குவதுடன் அவர்களுடன் இணைந்து செயற்படவும் தயாராக உள்ளோம்.
17. வலிகாமம் வடக்கு, கேப்பாபிலவு மற்றும் சம்பூர் உள்ளிட்ட இடம்பெயர்ந்துள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு வேண்டிய அழுத்தங்களை சர்வதேச சமூத்தின் உதவியுடன் மேற்கொள்ளுவோம்.
18. அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகத்திலுள்ள சனத்தொகை விகிதாசாரத்தினை திட்டமிட்ட முறையில் மாற்றியமைப்பதும், தமிழர் தாயகத்தின் புவியியல் ஒருமைப்பாட்டை துண்டிப்பதுமான சிங்களப் பேரினவாதத்தின் குடியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம்.
19. கலை பண்பாட்டுப் பிரிவு, விளையாட்டுப்பிரிவு என்பவற்றை உருவாக்கி அவற்றினூடாக தமிழர் கலை பண்பாடு மற்றும் விளையாட்டுத்துறை என்பவற்றின் மேம்பாட்டிற்காய் உழைத்து வருகின்றோம்.
20. தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பொருண்மிய மேம்பாடு பிரிவை நிறுவி அதனூடாக தமிழ் மக்களின், குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய தொழில் வாய்ப்புக்களை வழங்குதல் போன்ற செயற்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றோம்.
நாம் மூன்று தளத்தில் இந்த பிரச்சனைகளை அனுகிவருகின்றோம்
1. மக்களை அணிதிரட்டி போராட்டங்களை மேற்கொள்ளல்.
2. ஜ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச மட்டங்களில் எமது பிரச்சனைகளை எடுத்துச்செல்லல்.
3. சட்ட விவகார பிரிவை உருவாக்கி நீதிமன்றங்களில் வழக்குகளை தொடுத்தல்.
இவ் அணுகுமுறையை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம். எமக்கு மக்கள் அங்கீகாரம் கிடைக்குமாக இருந்தால் இப்பணிகளை வேகமாகவும் பரந்துபட்ட அளவிலும் செய்வதற்கு வாய்ப்புக்கள் ஏற்படும்.
தமிழின அழிப்புக்கு எதிராக நீதிபெறல்
தமிழ் மக்கள் மீது இனவழிப்பு, மானுட குலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்கள் புரியப்பட்டுள்ளமை வெளிப்படையானதே. இந்தக் குற்றங்கள் தொடர்பாக காத்திரமான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற செயன்முறையையே நாம் வேண்டுகிறோம். அறிக்கைகளை கோரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்கள் போதுமானவை அல்ல. குற்றவாளிக் கூண்டில் குற்றவாளிகள் நிறுத்தப்பட வேண்டும். இவ்விசாரணையானது இனவழிப்பு உட்பட்ட அனைத்து குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
இதை எவ்வாறு சாத்தியப்படுத்துவது? போரினால் பெருவாரியாக பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ் மக்களே. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தளம்பலும் இல்லாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற செயன்முறையே எமது கோரிக்கை என நாம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால், எமது நிலைபாட்டை மீறி எம்மீது உள்ளக செயன்முறையை வலிந்து திணிப்பதை நாம் தடுக்கலாம். தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஐ. நாவுக்கு உள்ளும் வெளியும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற செயன்முறையையே தேவை என்பதை பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் தெளிவாக சொல்லி வந்துள்ளது. பூகோள அரசியலை சரிவர கையாள்;வதனூடாகவும், எமது மக்களின் சனநாயக அணிதிரள்வை சரியாக பயன்படுத்துவதனூடாகவும் நாம் இதனை அடைந்து கொள்ளலாம்.
இதே வேளை, செப்டெம்பர் மாதம் வெளிவரவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையில், சிறீலங்கா இழைத்த குற்றங்களுக்காக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்யவேண்டும். அல்லது, இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பை விசாரிப்பதற்கு தனிப்பட்ட குற்றவியல் நீதிமன்றம் அமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.
அரசியல் மற்றும் போர்க் கைதிகள் விவகாரம்
சிறைகளிலும், புனர்வாழ்வு முகாம்கள் என்ற பெயரிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் போர்க்கைதிகளின் விடுதலைக்காக எம்மால் இயலுமான அனைத்து நடவடிக்கைகளையும் கூட்டடிணைந்து மேற்கொள்வோம்.சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு புறம்பாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்;.
அரசியல் அமைப்பின் 6ம் திருத்தச் சட்டம் நீக்கம்;
சிறீலங்காவின் அரசியல் அமைப்பில், அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான தனிமனிதனுடய பேச்சுச் சுதந்திரத்தினை கட்டுப்படுத்துகின்ற வகையில் இணைக்கப்பட்டுள்ள 1983 ம் ஆண்டின் 6 ம் திருத்தச் சட்டம் நீக்கப்படல் வேண்டும்.
தமிழர் தேசத்தின் பொருளாதார அபிவிருத்தி
தமிழ் தேசத்திலுள்ள அரைவாசிப் பகுதியினராகிய பெண்களின் மறைந்துள்ள ஆளுமையை வெளிக் கொணர்ந்து அவர்களை அரசியல், சமூக, பொருளாதார, அபிவிருத்தி நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்க வாய்ப்பளித்தல்.
தமிழ்த் தேசத்தின் சமூகக் கட்டமைப்புக்களில் புரையோடிப் போயுள்ள சாதியக் கருத்தியலையும் நடைமுறைகளையும் ஒழிக்க நடவடிக்கை எடுத்தல். எமது தாயகத்தின் அபிவிருத்தித் திட்டங்களை சூழல் (பௌதீக, உயிரியல், தாவர வளங்கள்) சமநிலையை பேணும் வகையில் மேற்கொள்ளல். அத்துடன், சுற்றுச்சூழலை பேணிப் பாதுகாப்பதற்கான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
எமது தேசத்தின் பண்பாட்டுத் தனித்துவங்களையும், பாரம்பரியங்களையும் காலத்திற்கேற்ப பேணும் வகையில் அபிவிருத்தியை மேற்கொள்ளல்.
தமிழர் தாயகம் செல்வம் கொழிக்கும் கடல் வளத்தையும், வளமான விவசாய நிலப்பரப்பையும், கனிம வளங்களையும் கொண்டதாய் உள்ளது. இந்த வளங்களை எமது மக்கள் வேலை வாய்ப்பும், உயர்மட்ட வருவாயும் பெறும் வகையில் வினைத்திறனுடன் பயன்படுத்துதல். அதற்குப் பொருத்தமான வேலைத்திட்டத்தையும் கால எல்லையையும் வகுத்து, தமிழ்த் தேசத்தின் நலன்களை முன்னிறுத்தி அபிவிருத்தியை மேற்கொள்ளல்.
எமது தாயகத்தின் வளங்களை பிற சக்திகள் சந்தையூடாகவோ அல்லது அரச அதிகாரத்தினூடாகவோ எமது தேசத்திற்கு பாதகமான முறையில் பயனபடுத்துவதனை அனுமதிக்க முடியாது. எங்கள் மண்ணில் எங்கள் காலில் நின்று நீடித்து நிலைத்த அபிவிருத்தியை (ளரளவயiயெடிடந னநஎநடழிஅநவெ) ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை படிப்படியாக உயர்த்துதல்.
தமிழர் தாயகத்தை மையப்படுத்திய பொருளாதார கட்டுமானத்தை ஊக்குவிப்போம். கொழும்பில் இருந்து தாயகப்பகுதியை நோக்கிய பொருளாதார நகர்வை ஊக்குவிப்போம்.
எமது தேசத்தின் அபிவிருத்தியின் இலக்குகளையும் நெறி முறைகளையும், திட்டமிடுவதற்கும், செயற்படுத்துவதற்குமாக கல்விமான்கள், சிந்தனையாளர்கள், துறைசார் வல்லுனர்கள், பொது அமைப்புக்கள், தமிழ் தேசத்தின் அனைத்து அரசியல் பிரதிநிதிகள் உட்பட்ட பரந்த பிரதிநிதித்துவத்தினை கொண்ட அதிகாரசபை ஒன்றை உருவாக்கப் பாடுபடுவோம்.
புலம்பெயர் மக்களின் பங்களிப்பு
தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் மற்றும் எமது மண்ணில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித்திட்டங்கள், தாயக மற்றும் புலம்பெயர் துறைசார் நிபுணர்களின் துணையுடனும் புலம்பெயர் மக்களின் பங்களிப்புடனும் முன்னெடுக்கப்படும்.
எமது தேசத்தின் பிரிக்கமுடியாத ஒரு அங்கமான புலம்பெயர் மக்களின் துணையுடன் எமது மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்கான செயன்முறைகளை மேற்கொள்வோம்.
இதன் மூலம்,
1) சிறீலங்காவின் இனவழிப்பு நடவடிக்கைகளால் பேரிழப்பைச் சந்தித்த எம்மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்ய உழைப்பதோடு, அவர்களை நீண்டகாலத்தில் அவர்களது சொந்தக் கால்களில் நிற்க வைப்பதற்கான வேலைத் திட்டத்தை திட்டமிட்டு மேற்கொள்வோம்.
2) தமிழர் தாயகப் பிரதேசத்தின் வேலைவாய்ப்பு, பொருண்மிய மேம்பாடு மற்றும் வளங்களை பாதுகாக்கும் விடயங்களில் நீண்டகால நலன்களின் அடிப்படையில் புலம்பெயர் மக்களின் முதலீட்டை பொருத்தமான இடங்களில் ஊக்குவிப்போம்.
3) போர் அனர்த்தங்களால் உடல் உள ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டு உடனடி, நீண்ட, கால மருத்துவ தேவைகளை எதிர் நோக்கும் எமது உறவுகளுக்கான அத்தியாவசிய தேவைகளை மேற்கொள்வோம்.
4) நீண்டகால பொருளாதாரத் தடையாலும் போராலும் பாதிக்கப்பட்ட கடற்றொழில், விவசாயம், சிறு கைத் தொழில், வர்த்தகம், போக்குவரத்துச் சேவை, போன்ற தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு பாதிப்படைந்தவர்கள் மீண்டெழுவதற்கான உதவிகளையும் ஊக்குவிப்புக்களையும் புலம் பெயர் மக்களின் உதவியோடு மேற்கொள்ளுவோம்.
5) பல்லாயிரமாகிவிட்ட பெண் தலைமை குடும்பங்களினதும் (றழஅயn hநயனநன கயஅடைநைள), தாய் தந்தையரை இழந்து நிர்க்கதிக்குள்ளாகி நிற்கும் எமது சிறுவர்களினதும்; எதிர்கால மேம்பாட்டிற்கான வழிவகைகளை கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
6) புலம் பெயர் தமிழ் மக்களின் உதவிகளுடன் அவர்கள் வாழும் நாடுகளினதும், தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களினதும் உதவிகளைப் பெற்று, பின்னடைவைச் சந்தித்துள்ள எமது மாணவர்களின் கல்வித் தராதரத்தை மேம்படுத்த உழைப்போம்.
7) இன்று தாயகத்தில் பட்டதாரிகள் உட்பட ஏராளமான இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பின்றி தாயகத்தை விட்டு வெளியேறிவருகின்றனர். இவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் முகமாக புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகளின் பேராதரவுடன் தனியார் நிறுவனங்களை உருவாக்கி வேலை வாய்ப்புகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம்.
8) போரில் அங்கவீனமாக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கும், பெற்றோரை இழந்த சிறார்களுக்கும் காப்பகங்களை உருவாக்கி பராமரிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்.
தமிழக மக்களுடனான உறவுகள்
தமிழக மக்களுடன் இணைந்து எமது மக்களது நீதியான அரசியல் சமூக பொருளாதார மேன்மைக்காக பாடுபடுவோம். தமிழக உறவுகளின் துணையுடன் இந்தியாவின் ஏனைய மாநில மக்களுடனும் அரசியல் கட்சிகளுடனும் மற்றும் சமூக அமைப்புக்களுடனும் உறவை வளர்த்து தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிக் கொணர்ந்து, நீதியான தீர்வை அடைய அவர்களது ஆதரவைப் பெற உழைப்போம்.
சர்வதேச சமூகத்தின் பொறுப்பு
தமிழர் தாயகத்தில் 2006 – 2009 மே வரை இடம் பெற்ற இன அழிப்பினை தடுத்து நிறுத்த, மனிதாபிமானத் தலையீடு என்ற அடிப்படையில் கூட தலையிடுவதற்கு சர்வதேச சமூகம் தவறிவிட்டது. விடுதலைப் புலிகள் ‘பயங்கரவாத அமைப்பு’ என்றும், அவ்வாறான அமைப்புக்கு எதிராக ஒரு ‘அரசு’ செயற்படுவதற்கு எதிராக தாம் செயற்பட முடியாதென காரணம் கூறி அமைதியாக இருந்தது.
தமிழ் இனத்தின் பாதுகாப்புக் கவசங்கள் அழிக்கப்பட்டுள்ள இன்றய நிலையிலும் கூட, தமிழ் பேசும் மக்கள் தமது தாயகம், தேசியம், சுயநிர்ண உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம், ஆகிய அடிப்படையிலான கொள்கைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஐனநாயக ரீதியாக போராட முற்படும் தமிழ் மக்களின் போராட்டத்தை மீண்டும் நசுக்கவே அரசு முயல்கின்றது. இவ்வாறு பாதுகாப்புக் கவசம் இன்றி நெருக்கடிக்கும் தள்ளப்பட்டுள்ள தமிழ் தேசத்தினை பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு (ஆழசயட சுநளிழளெiடிடைவைல) சர்வதேச சமூகத்திற்கு உண்டு.
எமது ஐனநாயக ரீதியான அரசியல் போராட்டத்தினை நோக்கி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கும், அப்போராட்டத்திற்கு அவர்களது ஆதரவையும் பாதுகாப்பையும் பெறுவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவோம்.
வெளியுறவுக் கொள்கை
போரிற்குப் பின்னரான தமிழ்த் தேசத்தின் நலன் சார் வெளியுறவுக் கொள்கை ஒன்றை வகுத்து முன்னெடுத்து வருகிறோம். எமது வெளியுறவுக் கொள்கை தமிழர் நலன்களை மையமாகக் கொண்டது. இது எந்த அரசையும் பகை நாடாக கருதாத கொள்கை. இலங்கைத் தீவின் பூகோள அமைவிடமும் தமிழரசியல் அதன் செல்நெறியின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தையும் சரிவரக் கையாள்வதனூடாக, தமிழர்களின் நலன்களை முன்னெடுக்கலாம் என நாம் திடமாக எமது மக்களிடம் எடுத்தியம்பி வருகிறோம். ஐ. நாவிலும் தாயகத்திலும் தமிழர்களின் குரலாக தொடர்ந்து ஒலித்திருக்கிறோம். இந்தக் குரலிற்கு, கொள்கைக்கு அங்கீகாரம் தர வேண்டும் என்ற கோரிக்கையை எம் மக்கள் முன்வைக்கின்றோம்.
தமிழத் தேசியப் பேரவை
தாயகத்தில் வாழும் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம், உடனடி வாழ்வாதாரப்பிரச்சனை, அபிவிருத்தி, வேலையாய்ப்பு போன்ற அனைத்து விவகாரங்களையும் கையாள்வதை தனி நபரிடமோ அல்லது ஒரு சிலரிடமோ விடுவது என்பது ஏற்புடையது அல்ல என்பது எமது நிலைப்பாடு. எனவே இவற்றை கையாள்வதற்காக வட கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் “தமிழத் தேசியப் பேரவை” ஒன்றை நிறுவ அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம். இதுவே எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அதி உயர் அதிகார சபையாக செயற்படும் வண்ணம் துறைசார் நிபுணர்கள் இவ் அவையில் உள்வாங்கப்படுவர்.
ஒற்றுமை
கடந்த காலங்களில் கொள்கையை முன்னிறுத்தி ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் கூட்டிணைந்து செயலாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். ஆனால் அவை அனைத்தும் துரதிஸ்டவசமாக தோல்வியிலேயே முடிவடைந்தன. எனினும் தேர்தலின் பின்னரும் கொள்கையின் பாற்பட்ட, மக்களுக்காக உண்மையாகவும் நேர்மையாகவும், தூய்மையாகவும் செயலாற்றக் கூடியவர்களை உள்வாங்கி உண்மையான ஒற்றுமையை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம். நாம் கொள்கையை முன்னிறுத்தாத போலி தேர்தல் ஒற்றுமைக்கு என்றுமே தயாரில்லை.
முடிவுரை
எமது மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படைகள்; சமரசத்திற்கு அப்பாற்பட்டவை. எமது மக்களின் நலன்களுக்கு மேற்குறித்த அந்தஸ்த்து அடைப்படையானது. நாம் எந்த நாட்டினதும், தேசத்தினதும், இனத்தினதும், இனக் குழுக்களினதும் நலன்களுக்கு எதிரானவர்கள் அல்லர். மாறாக, எமது தேசத்தின் நலன்கள் பேணப்படும் வகையில் சிங்கள தேசத்துடனும், இந்தியா மேற்குலகு உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடனும் ஆரோக்கியமான இராஐதந்திர உறவுகளை கட்டியெழுப்ப விரும்புகின்றோம்.
மேற் கூறப்பட்ட தீர்மானங்களை பூரணமாகச் செயல்வடிவில் சாதிக்கும் நோக்குடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் உறுதியுடன் பணியாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க போரடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம், எதிர்வரும் ஒகஸ்ட் 17ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். இத் தேர்தலில் எமக்கு அமோக ஆதரவை வழங்குமாறு தமிழ் மக்களை நாம் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்
02-08-2015