மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 25 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடைப்பிடிக்கப்படவுள்ளதாக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 5ம் நாள் ஞாயிற்றுக்கிழமை, மாலை 3.00 மணிக்கு, யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலாமண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில்,” மக்கள் மயப்படுத்தப்படவேண்டிய அரசியல்” என்னும் கருப்பொருளில், யாழ்.பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராமின் நினைவுப்பேருரையும் இடம்பெறவுள்ளது.
2000 ம் ஆண்டு ஜனவரி 5ம் நாளன்று கொழும்புநகரில் குமார் பொன்னம்பலம் அவர்கள் அவரது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சிறிலங்கா அரச இயந்திரத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
சிங்களப்பேரினவாதிகளின் தமிழர் விரோதக் கருத்துகளுக்கு சுடச்சுட, ஆணித்தரமான பதில்களை வழங்கி எதிர்வாதம் புரிந்துவந்த குமார் பொன்னம்பலம் அவர்களின் இழப்பின் போது அவருக்கு இரங்கல் தெரிவித்தும், அவரின் போராட்டப் பங்களிப்பை நினைவுகூர்ந்தும் தமிழர் தொடர்பூடகங்கள் அஞ்சலி செலுத்தி அவரைக் கெளரவப்படுத்தியிருந்தன.
தமிழர் தாயகத்திலும் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளிலும் அவருக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
சிறிலங்கா அரச படையினரின் தொல்லைகளையும் கடந்து ஆயிரக்கணக்கில் கொழும்பு நகரில் திரண்ட தமிழர்கள் அவரது புகழுடலுக்கு இறுதி அஞ்சலியைத் தெரிவித்திருந்தனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக குமார் பொன்னம்பலத்தின் துணிச்சலான போராட்டப்பங்களிப்புக்கும், அவரது தமிழ்த் தேசிய சேவைக்கும் மதிப்பளித்து தேசியத் தலைவரால் “மாமனிதர்” என்ற அதியுயர் விருது அவருக்கு வழங்கப்பட்டிருந்தமையும் நினைவுகூரத்தக்கது.
- 021 221 2530
- mediatnpf@gmail.com
- கட்சி தலைமையகம்: 16, மணல்தறை வீதி, யாழ்ப்பாணம்.