தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் மாமனிதர் சிவராமின் 15ம் ஆண்டு நினைவு நாள் நினைவு கூறப்பட்டது.

சிறிலங்காவின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இடம்பெற்ற இந்தக் கொலை தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என அப்போதைய மகிந்த ராஜபக்ச அரசு கூறியது. இன்றுவரை இது தொடர்பாக உரிய விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை.

ஊடகவியலாளர் சிவராம் மற்றும் நிமலராஜன் உள்ளிட்ட பல ஊடகவியலாளர்களை சிங்கள படைகளும் ஒட்டுக்குழுக்களும் படுகொலை செய்தமை இன்றுவரை ஊடகவியலாளர்கள் மத்தியில் மாறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகவியலாளர் மாமனிதர் சிவராம் தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவையை மதிக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிய அவரது 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை அனுட்டித்துள்ளது.

28.04.2020 செவ்வாக்கிழமை அன்று மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் மாமனிதர் சிவராமின் 15ம் ஆண்டு நினைவுகூறல் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டு மலர்தூவி அகவணக்கம் செலுத்தினார்கள்.

29.04.2020 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் செல்வராஜா கயேந்திரன் தலைமையில் மாமனிதரின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி காண்டீபன், மகளிர் அணித்தலைவி வாசுகி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர்தூவி அகவணக்கம் செலுத்தினார்கள்.