புதிய அரசியலமைப்பைத் தமிழ்மக்கள் நிராகரிப்பதன் மூலமே எதிர்காலத்திலாவது தீர்வைப் பெற முடியும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு ஒரு ஒற்றையாட்சி அரசியலமைப்பு. ஏற்கனவே இருக்கக் கூடிய 13 ஆவது அரசியல் திருத்தத்துக்குப் புதிய முகமூடியைக் கொடுக்கும் வகையில் மாத்திரமே காணப்படப் போவதே தவிர தமிழ்மக்களின் தேசிய அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒருபோதும் அமையப் போவதில்லை. எனவே, இவ்வாறான ஒற்றையாட்சி அரசியலமைப்பைத் தமிழ்மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும். அவ்வாறான போதுதான் தமிழ்த்தேசத்துடன் எந்தவொரு ஒப்பந்தமுமில்லாமல் இலங்கையின் அரசியலமைப்பு நான்காவது தடவையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த எழுபது வருடமாக நிலவும் இனப் பிரச்சினை போருக்குப் பின்னரும் தீர்க்கப்படாமல் தொடருகிறது என்பதை உலகத்துக்கு வெளிக்காட்டலாம். இதன்மூலமே தமிழ்மக்கள் எதிர்காலத்திலாவது இனப்பிரச்சினையில் தீர்வை நோக்கி செல்லலாம் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ். கொக்குவிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (29.07.2019) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்ற செயற்பாடு தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒத்திவைப்புப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அந்த விவாதத்தின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் பரவலாகப் புதிய அரசியலமைப்பின் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டவர் என்ற வகையில் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

அந்த விவாதத்தின் பொது சுமந்திரன் தற்போதைய அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும், ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையும் கடுமையாகச் சாடியிருந்தார்.

தமிழ்மக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றியிருப்பதாக அவர் கூறியிருந்தார். தமிழ்மக்கள் தங்களுக்கு வழங்கியுள்ள ஆணையை விட்டுக் கொடுத்து இணக்கப்பாடொன்று வரவேண்டும் என்ற காரணத்துக்காக சிங்கள கட்சிகளுடன் பல்வேறு விடயங்களிலும் இணங்கியிருந்ததாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது கிராமங்களுக்குச் சென்று தமிழ்மக்களைச் சந்திக்க முடியாதவளவுக்கு நிலைமை காணப்படுவதாகவும், நாங்கள் வழங்கியுள்ள ஆணையைக் கைவிடுவதற்கு நீங்கள் யார்? எனக் கேள்வி கேட்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

அதுமட்டுமல்லாமல் பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிரிக்குமொரு செயற்பாடென கூறியுள்ளமையைக் கண்டித்தும் அவர் இதன்போது கருத்துக்கள் வெளியிட்டிருந்தார். மகிந்த ராஜபக்ச போர் முடிவடைந்த பின்னர் தாமாக விரும்பி இந்தியாவுடன் சேர்ந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கைகள் மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.அந்த அறிக்கைகளை வெளியிடுவதன் மூலமாக அவர் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி வழங்கியுள்ளார். அந்த வாக்குறுதியை மீறும் வகையில் தான் அவர் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

அந்த அறிக்கை மூலமாக மகிந்த ராஜபக்ச வழங்கியுள்ள வாக்குறுதிகளில் ஒரு அங்குலத்தைக் கூடத் தாண்டி புதிய அரசியலமைப்புத் தயாரிக்கப்படவில்லை. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மகிந்த ராஜபக்ச இணங்கியதாகவும், 13 ஆவது திருத்தத்தை அர்த்தமுள்ள வகையில் அதிகாரப் பரவலாக்கல் செய்வதற்கு அதனைத் தாண்டியும் செயற்படுவேன் எனவும் தெரிவித்துள்ளார். எனவே, அவர் இந்தியாவுக்கும், உலகத்துக்கும் வழங்கியுள்ள வாக்குறுதிகளை மீறும் வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து தயாரித்துள்ள புதிய அரசியலமைப்பு அமையவில்லை எனவும் அவர் கோபமுடன் கூறுகிறார்.

இதன்மூலம் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் தன்னுடைய வாயாலேயே புதிய அரசியலமைப்பு 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதொரு அரசியலமைப்பு ஒப்புக் கொண்டுள்ளார். மகிந்த ராஜபக்ச தெளிவாகப் பல்வேறிடஙகளிலும் தான் ஒற்றையாட்சியைத் தாண்டி எதனையும் செய்யத் தயாரில்லை எனத் தெரிவித்துள்ள நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடனும், ஏனைய சிங்களக் கட்சிகளுடனும் சேர்ந்து தமிழ்மக்கள் வழங்கியுள்ள ஆணையை மீறி 13 ஆவது திருத்தத்தையே புதிய அரசியலமைப்பு என்ற பெயரில் கொண்டு வர முயற்சிக்கின்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதன்மூலம் வரலாற்றில் முதற்தடவையாக ஒரு ஒற்றையாட்சி அரசியலமைப்பைத் தமிழ்மக்கள்
ஆதரித்துள்ளதாக உலகத்திற்கு காட்டுவதற்குச் செயற்பட்டுக் கொண்டிருந்தமையை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

அத்துடன் இந்த ஒற்றையாட்சி அரசியலமைப்பு கடந்த காலங்களில் மூன்றுதடவைகள் கொண்டுவரப்பட்ட போது தமிழ்மக்களகவே அதனை நிராகரித்த காரணத்தால் தான் இந்த நாட்டிலேயே ஒரு இனப்பிரச்சினையே நிலவுகிறது. ஏனெனில், ஒரு சமூக ஒப்பந்தம் கிடையாது. ஆனால், இந்த 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் தாயாரிக்கப்படுகின்ற நான்காவது புதிய அரசியலமைப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தமிழ்மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சிக்கு ஆதரவு தருவதன் ஊடாக சமூக ஒப்பந்தமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக கூறி இனியும் இனப்பிரச்சினை இந்த நாட்டில் இல்லையென்றதொரு நிலையை உருவாக்குவதற்குத் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கடந்த பத்து வருடமாகச் செயற்பட்டு வந்துள்ளதென்பதை அவர் நிரூபித்துள்ளார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய நாள் முதல் கடந்த பத்துவருடங்களாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சி அடிப்படையிலான 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் தான் செயற்பட்டு வருகிறது. இறைமை, சமஸ்டி ஆகிய விடயங்களை அவர்கள் தேர்தல் காலங்களில் மாத்திரம் பேசினால் கூட அது தேர்தலுக்கான வெற்றுக் கோஷமாக மாத்திரமே காணப்படுவதாக எமது மக்களுக்கு சொல்லி வருகிறோம். தற்போது அவர்களுடைய உண்மையான முகம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தற்போதைய அரசாங்கத்தாலும், சிங்களத் தரப்புக்களாலும் ஏமாற்றப்படவில்லை. மாறாக மூன்று தேர்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியதொரு நிலையில் மீண்டுமொருமுறை தமிழ்மக்கள் சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டுள்ளதாக பொய்யைக் கூறித் தமிழ்மக்களின் ஆணையைப் பெற்றுத் தப்பிப் பிழைக்கும் வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகிறது எனவும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.