அன்னை பூபதியின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்திய அமைதிப்படைகளுக்கு எதிராக மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 19.03.1988 ஆம் ஆண்டு அன்னை பூபதி மட்டக்களப்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் இப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஒரு மாத காலத்தின் பின்னராக கடந்த 19.04.1988 ஆம் ஆண்டு உயிரிழந்திருந்தார்.

இவரின் 31 ஆம் ஆண்டு நினைவுகள் புலம்பெயர் தேசங்களிலும் தாயகத்தின் பல இடங்களிலும் இடம்பெற்று வந்த நிலையில் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

இதற்கமைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழிலுள்ள தலைமை அலுவலகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுகளும் நடைபெற்றன.

இதன் போது அன்னைபூபதியின் உறவினர் ஒருவர் சுடரேற்றினார். இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர் மாலை அணிவித்தார். இதனையடுத்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் மலர் மாலை அணிவித்தான் மலர் தூபி அஞ்சலியும் செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து யுத்தத்தில் பாதிக்கப்பட்ட நிலையிலும் கல்வியில் சாதனை படைத்த மாணவர்களிற்கு கல்விக்கான உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணண்ண், கட்சியின் நிர்வாக உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.