முல்லையில் பொங்கல் இசைநாடா வெளியீடும் மாற்றுத்திறனாளிகள் மதிப்பளிப்பும்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கலைபண்பாட்டுத்துறையால் நேற்றைய தினம் உழவர் திருநாளை முன்னிட்டு தைத்தமிழ்புதுவருட நிகழ்வுகளும் தேசிய பொங்கல்விழாவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட தலமைப் பணியகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திலகநாதன் கிந்துஜன் தலைமையில் இடம்பெற்ற தேசியப்பொங்கல் விழாவில் தமிழ்த் தேசிய மக்கள்முன்னணி – மல்லாவி அணியினர் கலந்து சிறப்பித்ததுடன் மாற்றுத்திறனாளிகளான முன்னாள் போராளிகள் 60 பேரை மதிப்பளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஆவண வெளியீட்டுப் பிரிவினால் “துளிர்விடும் பொங்கல்” என்னும் பாடல் இறுவட்டும் வெளியீடு செய்யப்பட்டது. கண்கவர் நடனங்கள் மற்றும் தாயகத்தின் புகழ் பூத்த இசைக்கலைஞர்களினுடைய இன்னிசை நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன.

இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் திரு.செல்வராஜா கஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் திரு.ஏரம்பு இரத்தினவடிவேல் மாவட்ட அமைப்பாளர் திரு.விஜயகுமார் கரை துறைப்பற்று செயற்பாட்டாளர் சுதர்சன் ஆகியோருடன் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் மேற்படி தேசிய பொங்கல் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.