ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளுக்கும் , பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நேரடியாக உதவிகள் செய்துள்ளோம்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாங்கள் நேரடியாக உதவிகளைச் செய்துள்ளோம். முன்னாள் போராளிகள் பலருக்கும் அவர்களுக்கான சுய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் கணிசமான உதவிகள் வழங்கியுள்ளோம் . புலம்பெயர் மக்களின் பங்களிப்பில்லாமல் இது சாத்தியமாகியிருக்காது எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கனடாவிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலிக்கு அண்மையில் அவர் வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியொன்று வழங்கியிருந்தார். அந்தச் செவ்வியில் ஏற்கனவே தமிழர்களின் தலைவர்கள் என சொல்லக் கூடியவர்கள் சரியான வகையில் பயணிக்கவில்லை. தமிழர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். ஆகவே, அவர்களுக்கு ஒரு சரியான மற்றும் கொள்கையுடன் ஒன்றுபட்டுப் பயணிக்கக் கூடிய தலைமை வேண்டுமெனத் தெரிவித்துத் தமிழ்த்தேசியமக்கள் முன்னணி கடந்த- 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்தது . இதுவரை தமிழ்த்தேசிய மக்கள் முன்ணனியைப் பொறுத்தவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியலை விமர்சித்ததை விட மக்களுக்கென அரசியல் ரீதியாக செய்த செயற்பாடு என்ன என ஒரு பொதுமகனாக உங்களிடம் கேள்வியை முன்வைத்தால் உங்கள் பதில் என்னவாகவிருக்கும் ? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எங்கள் அரசியல் கருத்துக்களைத் தாண்டி எங்களுக்குப் புலம்பெயர் மக்கள் மத்தியிலுள்ள செல்வாக்குகளைப் பயன்படுத்தி நாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்த காலம் முதல் போரால் பாதிக்கப்பட்ட பல்வேறு குடும்பங்களுக்கும் நாங்கள் உதவிகள் செய்து வந்திருக்கின்றோம். ஆனால்,, அந்த உதவிகள் மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளாகவே இருந்துள்ளன.

இதற்கு முக்கிய காரணம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தமிழ்மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எங்கள் அரசியல் தொடர்பாக அப்பட்டமான பொய்களைச் சொல்லி வந்தது. அதாவது நாங்கள் மகிந்த ராஜபக்சவுக்கு விலை போகின்ற தரப்பு எனவும், தமிழ்மக்களைத் திட்டமிட்டுப் பலவீனப்படுத்துவதற்காக விலை போன தரப்பு எனவும் பல்வேறு பொய் விமர்சனங்களைப் பரப்பி வந்தது.

இவ்வாறானதொரு நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்துவதற்குப் புதியதொரு கால அவகாசம் கிடைக்காத நிலையில் தான் நாங்கள் உதவிகள் செய்ய ஆரம்பித்தோம்.

ஒரு நாளில் வெளிநாடுகளில் இரண்டு மூன்று வேலைகள் செய்து கஷ்டப்பட்டு உழைக்கும் மக்கள் தங்கள் பணத்தை சரியான தரப்புக்கு வழங்க வேண்டும் என்ற வகையில் எங்களுடைய அரசியலை ஆழமாக விளங்கிக் கொண்டவர்கள் மாத்திரமே எங்களுக்கு உதவினார்கள். இவ்வாறான நிலையிலும் கூட நாங்கள் எங்களால் இயன்ற உதவிகளைச் செய்துள்ளோம்.

தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிழையான பாதையில் செயற்படுவதாகப் பலரும் குற்றச்சாட்டுகின்றார்கள். ஆனால், தவறு செய்த பின்னர் அந்தத் தவறைச் சுட்டிக்காட்டுவதால் பலனில்லை. கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்குத் துணை போகின்ற தரப்புக்களை விட உண்மையில் தமிழ்மக்களின் நலன்களை மையப்படுத்திச் செயற்படுகின்ற தரப்புக்களாயின் தவறு நடந்தவுடன் அதனைக் கண்டறிவது கடினமானதல்ல. நாங்கள் அப்படியல்ல.

கடந்த- 2009 ஆம் ஆண்டிலிருந்து எட்டு மாதங்களாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயிருந்தவாறு இவ்வாறான தவறுகள் நடந்துவிடக் கூடாதெனச் சிரமப்பட்டோம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மிக மோசமாகச் செயற்படப் போகின்றது என்பது தெரியவர நாங்கள் அதற்குத் துணை போகக் கூடாது என்ற வகையில் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து வெளியே வந்து உண்மைகள் அனைத்தையும் எங்கள் மக்களுக்கு கூறியுள்ளோம்.

சர்வதேச அரசியலாகவிருக்கலாம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மோசாமான செயற்பாடுகளாகவிருக்கலாம், தென்னிலங்கையில் நிலவும் அரசியல் நிலைமைகளாகவிருக்கலாம். அனைத்து விடயங்கள் தொடர்பிலும் எங்கள் மக்களுக்கெனத் தெளிவினை வழங்கியதுடன் எந்தவகையில் அந்த விடயங்களைக் கையாள்வது தொடர்பாகவும் நாங்கள் தொடர்ச்சியாக சுட்டிக் காட்டி வருகின்றோம்.

அந்த வகையில் எங்களைப் பற்றி யாரேனும் கணக்குப் போடுவதாகவிருந்தால் நாங்கள் இதுவரை காலமும் கூறிவந்த அரசியல் ரீதியான கருத்துக்களில் ஒரு விடயமெனும் தவறியிருக்கின்றதா? நாங்கள் இதுவரை காலமும் கூறிவந்த அனைத்து விடயங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையான யதார்த்தமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.